கோத்தா ஜனாதிபதி வேட்பாளர்:ஓகஸ்ட் 11?



ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பதவி ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என்றும், அன்றைய தினம் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக வெளியிடுவார் என்றும் அறியமுடிகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உயர்மட்டக் கூட்டம் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற்றது. அதிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டது எனவும் தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வருடாந்த சம்மேளனத்தை ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி நடத்துவதற்கும் அதற்கான ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்வதற்கும் விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.

இந்த மாநாட்டின்போதே கட்சி தலைமைப் பதவியை மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கும் யோசனையை தற்போதைய தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் முன்வைப்பார் என்றும், அதைப் பஸில் ராஜபக்ச வழிமொழிவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மாநாட்டில் சிறப்புரையாற்றும்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ச அறிவிப்பார் என்றும், அது பெரும்பாலும் கோட்டாபய ராஜபக்சவாகவே இருக்கும் என்றும் அறியமுடிகின்றது.

ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த அறிவித்த பின்னர் மறுநாள் காலை கண்டி தலதா மாளிகைக்கும், முன்னேஸ்வரம் கோயிலுக்கும் செல்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்பின்னர் மாவட்ட ரீதியில் ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக நிகழ்வுகளும் இடம்பெறும் எனவும் தெரியவருகின்றது.

No comments