இரணைமடு விசாரணை அறிக்கை வெளிப்படுத்தப்படவேண்டும்?


இரணைமடு குள புனரமைப்பு தொடர்பில் நடைபெற்றதாக சொல்லப்படும் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணை அறிக்கையினை வெளிப்படுத்தவேண்டுமென சமூக செயற்பாட்டாளர் கணேஸ் வேலாயுதம் கோரியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழ்ககிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இரணைமடு முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளினை வெளிப்படுத்த விடுத்த எனது கோரிக்கையினை தொடர்ந்து அதனை ஒரு வாரத்தில் வெளிப்படுத்துவதாக ஆளுநர் சுரேன் இராகவன் தெரிவித்திருந்தார்.

ஆனால் மாதங்கள் கடந்தும் அறிக்கை வெளியிடப்படவில்லை.

குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிக்கு வெறுமனே முல்லைதீவிற்கு இடமாற்றம் மட்டும் வழங்கப்பட்டது.அத்துடன் அவரை கௌரவித்து இப்போது கென்னியாவிற்கு சுற்றுலாவிற்கு அனுப்பியுள்ளார்கள்.

நான் அறிந்த வரை முல்லைதீவிற்கும் இரணைமடு போன்று பாரிய திட்டங்கள் வரவுள்ளதாக அறிகின்றேன்.

அங்கும் குறித்த அதிகாரி வருமானம் பார்த்துக்கொள்ள ஏற்பாடாகியுள்ளதாவென கேள்வி எழுப்பினார்.
முன்னதாக இரணைமடுக்குளத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் தலைவர் நீக்கப்பட்டார்.

இரணைமடு குளம் பெருக்கெடுத்தமையால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இரணைமடுக்குள நிர்மாணத்தின் போது ஊழல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு ஒன்று வட மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேவால் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவிற்குத் தலைவராக யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் தலைவர், பேராசிரியர் எஸ்.சிவக்குமார் நியமிக்கப்பட்டதுடன், வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் எஸ்.சண்முகநாதன் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.சிவக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
எனினும் அந்த குழு கலைக்கப்பட்டு புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் அது விசாரணை அறிக்கையினை ஆளுநரிடம் கையளித்திருந்தது தெரிந்ததே.

No comments