ஞாயிறு விடுமுறை:தமிழரசு தேசிய மாநாடு இன்று!


யாழ்ப்பாணத்தின் விடுமுறை நாட்களுள் ஒன்றான இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.

பங்காளிகளை கழற்றி விட்ட இக்கூட்டத்திற்கு மரியாதை நிமித்தம் த.சித்தார்த்தன் மட்டுமே வெளியிலிருந்து சென்றிருந்தார்.

டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தவர் எவரையும் காணக்கிடைக்கவில்லை.அழைப்பு விடுக்கப்படவில்லையா அல்லது அவர்களாக பங்கெடுக்கவில்லையாவென்பது தெரியவில்லை.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா தலைமையில் இந்த மாநாடு நடந்துவருகின்றது.

முன்னதாக, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்குக்கு அருகில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா. சம்பந்தன் தலைமையில் தந்தை செல்வாவின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, மாநாடு இடம்பெற்ற வீரசிங்கம் மண்டபம் வரை பேராளர்கள் ஊர்வலம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

No comments