அதிகாலை கோர விபத்து - மூன்று பெண்கள் பலி - ஆறு பேர் படுகாயம்

அனுராதபுரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் மூன்று பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தலாவ – மொரகொட சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புத்தேகமயில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த வானும், அனுராதபுரத்தில் இருந்து தம்புத்தேகம நோக்கிப் பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வானில் பயணித்த கல்நேவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்களே உயிரிழந்துள்ளனர். அத்துடன், அந்த வானில் பயணித்த மேலும் 3 பெண்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளை, லொறியின் சாரதி மற்றும் இரு உதவியாளர்களும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments