19 - மகிந்தவின் பதவி மோகத்தைப் பறித்தது! 20 - ரணிலின் அதிகார பல்லைப் பிடுங்கவா? பனங்காட்டான்

6வது அரசியல் திருத்தம் தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையை முறியடிக்க வந்தது. 13வது திருத்தம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி தமிழரை எத்திப் பிழைக்க வந்தது. 19வது திருத்தம் மகிந்தவின் பதவி மோகத்தைப் பறித்தது. 20வது திருத்தம் ரணிலின் அதிகாரப் பல்லைப் பிடுங்கவா? ஆட்டம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

சகல நிறைவேற்று அதிகாரங்களும் கொண்ட இலங்கையின் முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பே இலங்கையில் இன்றும் ஆட்சிச் சட்டமாகவுள்ளது.

ஆனால், நாற்பது ஆண்டுகால ஆட்சியில் மொத்தம் பத்தொன்பது திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவற்றுள் நான்கு திருத்தங்கள் மட்டுமே பொதுமக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவையாகவும், பல எதிர்ப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டவையாகவுமிருந்தன.

6ம், 13ம், 18ம், 19ம் திருத்தங்களே ஊடகங்களாலும் பொதுவெளியிலும் சர்வதேச மட்டத்திலும் நன்கு விமர்சிக்கப்பட்டவை.

1983 யூலை தமிழின அழிப்பைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன மிக அவசரமாக அதேயாண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி 6ம் திருத்தத்தை நிறைவேற்றினார்.

எவரொருவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கருத்து வழங்கலூடாகவோ நிதி வழங்கல் மூலமோ இலங்கைக்குள் தனிநாடு உருவாக ஆதரிப்பதையும், எந்தவொரு அரசியல் கட்சியும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாக செயற்படுவதையும் இந்த 6ம் திருத்தம் தடை செய்தது.

நேரடியாகக் குறிப்பிட்டு சொல்வதானால், இலங்கைத் தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு முழுமையான தடை விதிப்பதாக இது அமைந்தது. இதனை மீறுபவரின் குடியுரிமை ஏழாண்டுகளுக்கு பறிக்கப்படலாம்.

அப்போதிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவியிழக்கவும் 6ம் திருத்தம் வழிகோலியது.

அடுத்தது, 13வது திருத்தம். இலங்கையைத் தாயகமாகவும், வடக்கு கிழக்கை தங்கள் பூர்வீகமாகவும் கொண்ட தமிழர்களுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட திருத்தம் இது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ராஜிவ் காந்தியும் 1987 யூலை 29ம் திகதி கைச்சாத்திட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம், தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதாக இரு தலைவர்களாலும் கூறப்பட்டது.

இதற்கென மாகாண சபைகளை உருவாக்கக் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தம், 1987 நவம்பர் 14ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபையை, சில வருடங்களின் பின்னர் இலங்கையின் உச்ச நீதிமன்றம் சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்து இல்லாமற் செய்தது.

மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம், காவற்துறை அதிகாரம் என்பன கிடைக்குமென உறுதியளிக்கப்பட்டதாயினும், முப்பது வருடங்களைத் தாண்டியும் அது கைகூடவில்லை. இப்போது மாகாண சபைகளுக்குத் தேர்தலுமில்லை.

18வது அரசியல் திருத்தம் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்தபோது கொண்டு வரப்பட்டு, 2010 செப்டம்பர் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மூல அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதி பதவி வகிக்கும் ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதென கூறியது. ஆனால், இரண்டு தடவைகளுக்குப் பின்னரும் அப்பதவியில் நாட்டம் கொண்ட மகிந்த, தாம் தொடர்ந்தும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பாக, ஒரு ஜனாதிபதி எத்தனை தடவையும் போட்டியிட முடியுமென்று திருத்தம் செய்து நிறைவேற்றினார்.

எனினும், 2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாம் தடைவை போட்டியிட்ட மகிந்த, தமது அமைச்சரவையில் பத்தாண்டுகள் அமைச்சர் பதவி வகித்தவரும், சுதந்திரக் கட்சியின் செயலாளராகவிருந்தவருமான மைத்திரியிடம் தோல்வி கண்டார்.

இத்தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட இவர், அவ்வேளை பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் (2020) போட்டியிட மாட்டேன், பதவியேற்ற நூறு நாட்களுக்குள் 18வது அரசியல் திருத்தத்தை ரத்து செய்வேன் என்பவை இதில் முக்கியமானவை.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு முழுமையாக வழங்குவேன் என்ற இவரது வாக்குறுதியே 19வது திருத்தத்தின் மூலாதாரம்.

2015 ஜனவரி மாதத் தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவான மைத்திரி, உடனடியாக ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார். தேர்தல் வாக்குறுதிப்படி 19வது திருத்தம் 2015 மே 15ஆம் திகதி சபாநாயகரால் ஒப்பமிடப்பட்டது.

மைத்திரி விரும்பியவைகளைவிட வேறு பல அம்சங்களை இத்திருத்தம் உள்ளடக்கியது.

ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் ஆறு ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் ஆட்சிக்காலமும் அவ்வாறு ஐந்து ஆண்டுகளானது.

ஜனாதிபதி ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட முடியாது. நாடாளுமன்றத்தை அதன் முதல் நான்கரையாண்டு காலத்துக்குள் ஜனாதிபதி கலைக்க முடியாது. கலைக்க விரும்பினால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற வேண்டும்.

தனிக்கட்சி அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் முப்பது மட்டுமே. இரு கட்சிக் கூட்டரசாயின் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. (அமெரிக்க பிரஜாவுரிமையைக் கொண்டிருந்த கோதபாய, பசில் ஆகிய இருவரையும் இலக்கு வைத்து இது கொண்டு வரப்பட்டது.

முப்பத்தைந்து வயதுக்கு மேட்பட்டவர்களே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும். 19வது திருத்தம் கொண்டு வரப்பட்டபோது 29 வயதாகவிருந்த மகிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ச, 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது தடுக்கும் நோக்கில் இந்த ஏற்பாடு. இது போன்ற இன்னும் பல.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில், தாமே முன்னின்று கொண்டு வந்த 19வது திருத்தத்தை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கையை மைத்திரி முன்வைத்திருப்பது, அவரை ஓர் அரசியல் கோமாளியாக்கியுள்ளது.

நாட்டில் இப்போது நிலையான ஆட்சியில்லாதிருப்பதற்கு 19வது திருத்தமே காரணமென்பது இவரது காலம் கடந்த கண்டுபிடிப்பு.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 210 பேரின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட 19வது திருத்தத்தை எதற்காக மைத்திரி இப்போது வெறுக்கிறார்?

மகிந்த ராஜபக்ச அணியினர் ஆதரவளித்த இந்த 19வது திருத்தம் மகிந்தவின் சகோதரரான சமல் ராஜபக்ச சபாநாயகராகவிருந்தபோது நிறைவேற்றப்பட்டது என்பது முக்கிய கவனிப்புக்குரியது.

குடும்ப ஆட்சியை முடித்து, மக்களாட்சி என்னும் நல்லாட்சியை 19வது திருத்தம் ஏற்படுத்தியது என்று கூறியவர் இப்போது அதனைக் கண்டு அஞ்சுகிறார்.

20வது திருத்தத்தினூடாக 19ஐ அழிக்கப்போவதாகவும் கூறுகிறார்.

ஓர் அரசாங்கத்துக்கு இரண்டு தலைவர்கள் இருக்க முடியாதென்பது இவர் முன்வைக்கும் காரணம். அதாவது தாமும் பிரதமர் ரணிலும் ஒரே அரசாங்கத்தில் சமநிலைத் தலைவர்களாக இருக்க முடியாதென்பதை அப்பட்டமாகக் கூறுகிறார் மைத்திரி.

பிரதமரைப் பதவி நீக்க முடியாத நிலை, புதிய பிரதமரை நியமிக்க முடியாத நிலை, அமைச்சர்களில் கை வைக்க முடியாத நிலை, பொலிஸ் மாஅதிபரை பதவி நீக்க முடியாத நிலை, பொது ஆணைக்குழுக்களில் தலையிட முடியாத நிலையென்று அண்மையில் தாம் சந்தித்த சகல தோல்விகளுக்கும் 19ம் திருத்தத்தை இவர் காரணம் கூறுகிறார்.

ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றும் அதிகாரம் தவிர, மற்றெல்லாம் இந்த அரசியலமைப்பில் தமக்குண்டு என்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன சொன்னவைகள் இப்போது தமக்கு இல்லையென்ற அங்கலாய்ப்பே மைத்திரியின் அழுகுரலுக்குக் காரணம்.

19வது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு வாகனத்தை இரண்டு சாரதிகளால் (ஜனாதிபதி, பிரதமர்) ஒருபோதும் செலுத்த முடியாது. ஒருவர் கியர் போடுகிறார் மற்றவர் ஸ்டியரிங்கை பிடிக்க விரும்புகிறார். 62 லட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்றவர் தலைவராக இருக்கையில், நாடாளுமன்றத்தில் ஓர் ஆசனத்தைப் பெற்று முன்வரிசையில் இருப்பவருக்கு அவர் அடிபணிவதா என்று கனவுலக சஞ்சார எண்ணங்களை பகிரங்க வெளியில் மைத்திரி வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வியுற்று ரணில் வெற்றி பெற்றால், அந்தக் கதிரையில் அமர்ந்தபின் தம்முடைய நிலைமை என்னாகுமென்னும் மனப்பைத்தியம் மைத்திரியை ஆட்ட ஆரம்பித்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் என்பவை 19வது திருத்தத்தை நீக்குவதற்கு ஆதரவளிக்கப் போவதில்லையென அறிவித்துவிட்டன. மகிந்தவின் அணியிலுள்ள வாசுதேவ நாணயகார தலைமையிலான இடதுசாரிகளும் அதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.

தமிழரை வழிக்குக் கொண்டுவர ஜே.ஆர்.ஜெயவர்த்தன 6ம் 13ம் அரசியல் திருத்தங்களைக் கொண்டு வந்தார்.

மகிந்தவின் பதவி மோகத்தை அழிக்க ரணிலின் ஆதரவோடு மைத்திரி 19வது திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

இப்போது யாருடைய பல்லைப் பிடுங்க 20வது திருத்தத்தை வேண்டி நிற்கிறார்?

ரணிலின் அதிகார பல்லையா?

No comments