தடையின்றி வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி!

முல்லை. பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் கோயில் பௌத்த விகாரைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு வெளியாகியது. பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் தடையின்றி வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .
முல்லைத்தீவு பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அடாத்தாக பிடித்து பௌத்த மதகுரு ஒருவர் விகாரை அமைந்துள்ளமை தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையில் இன்றையதினம் குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது .
அதாவது அடாத்தாக பௌத்த பிக்குவால் விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் ஒரு பிள்ளையார் ஆலயம் மிக நீண்டகாலமாக இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பிள்ளையார் ஆலயத்தில் தடைகள் எதுவும் அற்றநிலையில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்திகளை உரிய உள்ளுராட்ச்சி திணைக்களகளின் அனுமதிகளுடன் மேற்கொள்ளவும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று அனுமதியளித்து தீர்ப்புவழங்கியுள்ளது .

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி எஸ் .லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கிலேயே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் முதலாம் தரப்பாக பிள்ளையார் ஆலய வளவில் விகாரை அமைத்துள்ள குருகந்த ரஜமஹா விகாரையின் விக்ராதிபதியும் இரண்டாம் தரப்பாக நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர் . இதில் பிள்ளையார் ஆலயம் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டதரணிகள் தமது வாதங்களை முன்வைத்தனர். 

மிக நீண்டநேரம் இடம்பெற்ற இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி முதலாம் தரப்பான பௌத்த மதகுரு இரண்டாம் தரப்பான பிள்ளையார் ஆலயத்தினரின் வழிபாட்டுக்கு எந்தவிதமான தடையையும் ஏற்படுத்தக்கூடாது எனவும் கட்டுமான வேலைகளின்போது உரிய அனுமதிகளை உள்ளூராட்சி திணைக்களங்களில் பெற்று மேற்கொள்ளவேண்டும் எனவும் அதேபோல் இரண்டாம் தரப்பான பிள்ளையார் ஆலயதரப்பினர் வழிபாடுகளை சுயமாக தடைகளின்றி மேற்கொள்ளமுடியும் எனவும் கட்டுமானங்களை மேற்கொள்ளவிருந்தால் உரிய அனுமதிகளை பெற்று மேற்கொள்ளமுடியும் எனவும் ஏற்கனவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் என இருந்த பெயர்பலகையை மாற்றி கணதேவி தேவாலயம் என பௌத்த பிக்கு பெயர் பலகையை நாட்டியிருந்தார் .ஆகவே அது வழமையாக இருந்ததைப்போன்று நீராவியடி பிள்ளையார் ஆலயம் என மீண்டும் அமைக்கப்படவேண்டும் எனவும் அதனை உறுதிசெய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிபதி பொலிசாருக்கு கட்டளையிடடார் . மேலும் இரண்டு தரப்பும் தலா இரண்டுலட்ஷம் ரூபா பெறுமதியான பிணையில் செல்லலாம் எனவும் மன்று கட்டளையிட்டது 

No comments