அவசரகால சட்டத்திற்கு கைதூக்கும் டக்ளஸ்?


நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவசரகாலச் சட்டம் உள்ளிட்டவற்றை அரசு கொண்டுவருவது இயல்பானதுதான் என வக்காலத்து வாங்கியுள்ளார் டகளஸ். தேசிய பாதுகாப்பு என்பது ஒரு இனத்துக்கானதல்ல. இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த மக்களினதும் பாதுகாப்பு தொடர்பானதொன்றாகும். நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றாலோ அன்றி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக அவசரகாலச் சட்டம் உள்ளிட்டவற்றை அரசு கொண்டுவருவது இயல்பானதுதான். இதை நடைமுறைப்படுத்தும்போது அப்பாவிகள் பாதிக்கப்படாத வகையிலும் பாதிக்கப்படும் இலக்குகளாக நாம் பார்க்கப்படாத வகையிலும் இருக்க வேண்டும் என்பதுடன் மக்களும் அதை உணர்ந்தவர்களாக விழிப்போடு செயற்படுவதும் அவசியமாகும் என்றும் டக்ளஸ் யாழ்ப்பாணத்தில்; இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டிலேற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிகம் பேசப்பட்டுவருகின்றது. பயங்கரவாதத்தை அடக்கவென அரசு மீண்டும் அவசரகாலச் சட்டத்தை கையிலெடுத்துள்ளது. இது எமது நாட்டைப்பொறுத்தளவில் கடந்தகாலங்களில் நடைமுறையில் இருந்த ஒன்றுதான். ஆனால் அதனூடாக களையப்படவேண்டிய களைகளுடன் பயிர்களும் களையப்பட்ட சம்பவங்களும் கடந்தகாலங்களில் நடைபெற்ற வரலாறுகளும் உண்டு. ஆனால் இம்முறை நடைமுறைக்கு வந்துள்ள இந்த சட்டமானது பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அத்துடன் பயங்கரவாதத்தை அழிப்பதில் இலங்கைக்கு அதிகளவில் அனுபவம் இருக்கின்றது. இதனால் வெளிநாட்டு தலையீடுகள் தேவையற்றதொன்றாகும் என்றே கருதுகின்றேன்.

அதே நேரம் வன்முறைகளை தூண்டிவிடும் தரப்பினர் தமது அலுவலகங்களிலோ அன்றி தமது வீடுகளிலோ எதுவிதமான சட்டவிரோதமான தடையங்களையும் வைத்திருப்பதில்லை. ஆனால் அத்தகையவர்கள் எமது இளைஞர்களை தமது அரசியல் சுயலாபங்களுக்காக தூண்டிவிடும் செயற்பாடுகளைத்தான் முன்னெடுக்கின்றார்கள். இந்த வலையில் எமது இளைஞர்கள் வீழ்வதனால்தான் பல தேவையற்ற பிரச்சினைகளுக்கு அவர்கள் முகங்கொடுக்க நேரிடுகின்றதெனவும் டகளஸ் தெரிவித்துள்ளார்..

No comments