மாணவர் கைது - கோப்பாய் பொலிஸ் அதிகாரி கொழும்புக்கு அழைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்கின் பிரதிகளுடன் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மாணவர்கள் இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரம் (Plaint) சமர்ப்பிப்பது தொடர்பிலேயே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சட்ட மா அதிபரால் அழைக்கப்பட்டுள்ளார் என அறிய முடிகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன.

அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் இராணுவ அதிகாரியால் கோரப்பட்டுள்ளது.

மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளரையும் வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மாணவர்கள் சார்பில் நகர்த்தல் பத்திரம் அணைத்து இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி மாணவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சமர்ப்பணம் செய்தனர்.

மாணவர்கள் சார்பான விண்ணப்பம் மீது நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டது. வழக்குத் தாக்கலில் உள்ள தவறுகள் சீர்படுத்தக் கூடியவை என்று வியாக்கியானம் வழங்கி மன்று மாணவர்கள் மீதான பிணை விண்ணப்பத்தையும் நிராகரித்தது.

இந்த விடயம் தொடர்பில் சட்ட மா அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பு இடம்பெற்றது. மாணவர்கள் இருவருக்கும் பிணை வழங்க சட்ட மா அதிபர் இணங்கம் தெரிவித்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

மாணவர்கள் இருவரையும் பிணையில் விடுப்பதற்கான அறிவுறுத்தல் சட்ட மா அதிபரால் விடயத்துக்குப் பொறுப்பான பிரதி சொலிஸ்ரார் ஜெனரலுக்கு நேற்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி இருவரையும் மாணவர்களுக்கு எதிரான வழக்குக் கோவையின் பிரதிகளுடன் வருமாறு நேற்று சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இருந்து அழைப்பு வந்தது.

இரண்டு பொறுப்பதிகாரிகளும் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்குச் சென்றால் பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரி இல்லாததால், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மட்டும் வழக்கின் பிரதிகளுடன் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்குச் சென்றுள்ளார் என்று அறிய முடிகிறது.

மாணவர்கள் இருவருக்கும் பல்கலைக்கழக சிற்றுண்டிச் சாலை நடத்துனருக்கும் எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்வது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கவே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சட்ட மா அதிபரால் நேரில் அழைக்கப்பட்டுள்ளார் என அறியமுடிகிறது.

No comments