இரு இஸ்லாமியக் குழுக்கள் மோதல் நாவாந்துறையில் பதற்றம்


யாழ்ப்பாணம் நாவாந்துறை நாவலர் வீதியில் (காதர் அபூபக்கர் வீதி) உள்ள பச்சைப் பள்ளிவாசலில் இரு இஸ்லாமியக் குழுக்களுக்கிடையே  முறுகலால் நேற்றிரவு அங்கு பதற்றம் ஏற்பட்டது.

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் ஏனைய குழு ஒன்றுக்குமிடையிலேயே மோதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தௌஹீத் ஜமாத் இன் கட்டுப்பாட்டிலேயே குறித்த பச்சைப்பள்ளிவாசல் இயங்கிவந்துள்ளது. குறித்த அமைப்பு தடைசெய்யப்பட்டு அதன் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் பொதுக் கூட்டம் ஒன்றினை நடத்தி பள்ளிவாசலைப் பொறுப்பேற்பதற்கு பிறிதொரு இஸ்லாமிய அமைப்பு முயன்றிருக்கின்றது.

இதனை தடைசெய்யப்பட்ட  தீவிரவாத அமைப்பான தௌஹீத் ஜமாத் இன் ஆதரவாளர்கள் எதிர்த்ததோடு நேற்றய கூட்டத்திலும் குழப்பம் விளைவித்துள்ளனர். இதன்போதே முறுகல் அதிகரித்து கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு விரைந்ததால் முரண்பட்டுக் கொண்ட இரண்டு தரப்பினரும் கலைந்து சென்றனர். எனினும் குழப்பம் விளைவித்த இரண்டு தரப்பினரிடமும் விசாரணைகளை முன்னெடுக்க சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் பள்ளிவாசலை முற்றுகையிட்டுள்ளனர்.

இந்நிலையில்  விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ்ப்பாணம் பொலிசார், முரண்பட்டுக் கொண்ட இரண்டு தரப்புக்களையும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை  யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments