கண்காணிப்பு கமராவை அகற்ற நீதிமன்றம் பணிப்பு!




ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அத்துமீறி பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அங்கு ஆக்கிரமித்து விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் பிள்ளையார் ஆலயத்துக்கு மட்டும் பொருத்தப்பட்டுள்ள இரகசிய கண்காணிப்பு கமராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லைத்தீவு காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றின் அனுமதிகளுடன் பிள்ளையார் ஆலயத்தின் இருமருங்கிலும் வீதி ஓரம் பெயர் பலகையை அறங்காவலர் சபையினர் முற்பட்டனர்.

இதன்போது பௌத்தபிக்குவாலும்; விகாரைக்கு பாதுகாப்பாக நிற்கும் இலங்கை காவல்துறையினராலும் தடுக்கப்பட்டது.அத்தோடு பௌத்த பிக்குவின் முறைப்பாட்டுக்கு அமைவாக உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு காவல்துறையினர் ஆலயத்துக்கு வழிபாட்டுக்காக சென்ற மக்களை தடுத்து வைத்ததுடன் நிலத்தில் அமர்த்தி விசாரணைகளை நடத்தியிருந்தனர் .

இந்த சம்பவங்களையடுத்து குறித்த நீராவியடி பிள்ளையார் ஆலயத்தினை சேர்ந்தவர்களால் நகர்த்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையில் சிரேஷ்ட சட்டதரணி அன்டன் புனிதநாயகம் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சேர்ந்த சட்டத்தரணிகளும் ஆஜராகியிருந்தனர்.

நேற்றையதினம் வழிபாடுகளுக்கும் அபிவிருத்தி வேலைகளுக்கும் சென்ற நீராவியடி பிள்ளையார் ஆலயத்தினருக்கு பொலிஸாரினாலும் பௌத்த பிக்கு தரப்பினராலும் இடையூறு ஏற்பட்டமை தொடர்பில் ஆதாரம் காட்டி சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
இதனையடுத்து உடனடியாக முல்லைத்தீவு காவல் நிலைய பொறுப்பதிகாரியை மன்றுக்கு அழைத்த நீதிபதி வழக்கின் தீர்ப்பின் படி பௌத்தபிக்குவால் மாற்றம் செய்யப்பட்ட கணதேவி தேவாலயம் என்ற பெயரை ஏற்கனவே இருந்ததை போன்று நீராவியடி பிள்ளையார் ஆலயம் என மாற்றம் செய்யுமாறு பணித்திருந்தார்.

அத்துடன்; பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களையும் அகற்ற உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இரண்டு தரப்பினரையும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நீதிமன்றின் தீர்ப்பை மதித்து செயற்படுமாறும் அமைதிக்கு பங்கம் ஏற்படாதவாறு செயற்படுமாறும் கட்டளையிட்டார். இதனை இனியும் மீறுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாக நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

No comments