கூட்டமைப்பின் குரங்குப் புத்தி - மருத்துவர்கள் கண்டனம்

அண்மையில் யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் நியமனம் தொடர்பாக ஆளுநரின் செயலாளரினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் (கீழ் இணைக்கப்பட்டுள்ளது) இந்த நியமனம் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களான திரு மாவை சேனாதிராஜா மற்றும் திரு சி வி கே சிவஞானம் ஆகியோரினால் தெரிவிக்கப்பட்ட அபத்தமான கருத்துக்கள் இவர்களுடைய சட்ட அறிவு மற்றும் இவர்களால் நிர்ணயிக்கப்பட இருக்கும் தமிழர்களின் எதிர்காலம் தொடர்பாக பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ சேவை வைத்தியர்களின் நியமனம் அகில இலங்கை ரீதியில் மத்திய சுகாதார அமைச்சின் கீழ் இன்றுவரை மேற்கொள்ளப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்த அகில இலங்கை ரீதியான நியமனங்களுக்குள் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் நியமனமும் அடங்கும். 1987 ம் ஆண்டு மாகாணங்களுக்கு அதிகார பகிர்வை வழங்கும் 13 ம் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்பட்ட போதிலும் இன்றுவரையும் 25 மாவட்டங்களுக்கும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் நியமனங்கள் மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் செயலாளரினால் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உரிய சட்ட திருத்தத்தை கடந்த 32 வருடங்களுக்குள் செய்திருக்க வேண்டும்.

அல்லது மாகாணசபை மூலமாக உச்ச நீதிமன்றத்தில் இந்த நியமனங்களை கேள்விக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். சுகாதார துறையில் உண்மையான அதிகாரப் பகிர்வுக்காக எந்த முயற்சியையும் இதுவரை செய்யாத திரு மாவை சேனாதிராஜா மற்றும் திரு சி வி கே சிவஞானம் சடுதியாக யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் நியமனம் அதிகாரப் பகிர்வுக்கு எதிரானதாக இருக்கிறது என்று தெரிவித்து இருப்பது இவர்களுடைய உண்மையான நோக்கம் மற்றும் , சட்ட அறிவு தொடர்பாக பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்த அபத்தமான கருத்துக்கள் தொடர்பாகவும் இவற்றை தெரிவித்து வருபவர்கள் எதிர்காலத்தில் தமிழ் மக்களை சரியாக வழி நடத்துவார்களா என்ற சந்தேகமும் கவலையும் சிரேஷ்ட தமிழ் மருத்துவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

No comments