ஊடகவியலாளர் கொலைகளுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி மீண்டும் பணியில்


ஊடகவியலாளர்கள்கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட மூன்று சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்த மீண்டும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

நேர்காணல் ஒன்றில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

லசந்த விக்ரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர்கள் உபாலி தென்னக்கோன் மற்றும் கீத் நொயார் ஆகியோர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கியமான சந்தேக நபராக, மேஜர் புலத்வத்த குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

இவர் திரிப்பொலி என அழைக்கப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இரகசிய முகாமின் கட்டளை அதிகாரியாக இருந்தவர்.

இதன்போதே, பல்வேறு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இரகசிய நடவடிக்கைகளுக்கு அவர் தலைமை தாங்கியிருந்தார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேஜர் புலத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில்,  மீண்டும் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அவர் நேரடியாக தனக்குக் கீழ் செயற்படும் சிறப்பு பிரிவு ஒன்றில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் தாக்குதல்களுடன் தொடர்புடைய மேஜர் புலத்வத்த மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது குறித்து, ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு, அதிருப்தி வெளியிட்டுள்ளது.

No comments