கொலைகாரன்மீது பயமேற்படுவது எந்த வகையில் தவறாகும் - பனங்காட்டான்

கோதபாய ராஜபக்ச மீதிருக்கும பயமே அவர் மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்ய காரணமென அவரது அண்ணனான மகிந்த ராஜபக்ச கூறியிருப்பது முற்றிலும் உண்மையென
ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு கொலைகாரனைக் கண்டால் யாருக்குத்தான் பயம் ஏற்படாது? 

இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளில் ஏழின் ஆட்சிக்காலம் முடிவடைந்துவிட்டது. இவற்றுக்கான தேர்தல்கள் எப்போது என்பது தேர்தல் ஆணையகத்துக்கே இன்னமும் தெரியவில்லை.

பழைய முறையிலா அல்லது புதிய முறையிலா இத்தேர்தல் என்னும் வாதத்தில் மைத்திரி தரப்பும் ரணில் தரப்பும் இழுபடுகின்றன.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கு சட்டப்படி இன்னமும் ஒன்பது மாதங்கள் உள்ளன. மைத்திரிபால சிறிசேன நினைத்தால் ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் எந்தவேளையிலும் இது நடைபெறலாம்.

தமது பதவிக்காலம் அடுத்தாண்டு நடுப்பகுதிவரை இருக்கலாமோ என்ற நப்பாசையில் அவர் அல்லாடிக் கொண்டிருப்பதால், இது பற்றிய முடிவு எப்போது எடுக்கப்படுமென தெரியாது.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு முற்பகுதியில் நடைபெறலாமென சகல அரசியல் கட்சிகளும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றன.

இப்போதுள்ள அரசியல் குழப்ப நிலையில் ஜனாதிபதிக்கான தேர்தலே முதலில் நடைபெறும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.

பெண்களின் குழாயடிச் சண்டையைப் போன்று, எந்தெந்தக் கட்சியிலிருந்து யார் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற ஆருடம் இப்போது அங்குமிங்கும் தலைவிரித்தாடுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவின் சூட்சுமத்தால் உருவாக்கப்பட்ட பத்தொன்பதாவது அரசியல் திருத்தச் சட்டம் மகிந்த ராஜபக்சவையும் அவர்களது புத்திரர்களையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிடாது தடுத்துவிட்டது.

இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் போட்டியிட முடியாது என்ற திருத்தம், மகிந்தவை போட்டியிலிருந்து விலக்கி விட்டது. வேட்பாளர்களுக்கான வயதெல்லை அதிகரிக்கப்பட்டதால் மகிந்தவின் புதல்வர்கள் எவரும் இப்போது போட்டியிட முடியாது விலக்கப்பட்டுள்ளனர்.

இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவர்கள் எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாதென்னும் புது விதி, இலங்கை மற்றும் அமெரிக்க பிரஜாவுரிமைகளைக் கொண்ட கோதபாய ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலைமையை உருவாக்கியுள்ளது.

கோதபாய இத்தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளதால் அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்துச் செய்ய வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

அப்படியானதொரு நிலைமை உருவாகி கோதபாய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரானால் மொத்தம் மூன்று பிரதான சிங்கள வேட்பாளர்கள் களத்தில் இறங்குவர். (வடமாகாணசபை முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தமிழர் தரப்பில் போட்டியிட வேண்டுமென ஒரு குரல் எங்கோவிருந்து எழுப்பப்பட்டுள்ளது).

இரண்டாம் தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தை தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன அதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார். (வடமாகாண ஆளுனராக சுரேன் ராகவனை நியமித்து காய்களை நகர்த்துவது இதில் ஒன்று).

இம்முறை பொது வேட்பாளர் கிடையாது என்ற அறிவிப்புடன், ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடுவாரென்று அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பகிரங்கமாக அறிவித்து பரப்புரைகளையும் ஆரம்பித்துவிட்டனர்.

கோதபாய தமது அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்துவிட்டு இத்தேர்தலில் குதிப்பாரானால், போட்டி முத்தரப்பாக அமையும்.

மைத்திரியும் கோதபாயவும் இலங்கை சுதந்திரக் கட்சியினதும் அதன் தோழமையான இடது சாரிக் கட்சிகளதும் வாக்குகளை இரண்டாகப் பிளவுபடுத்தினால் ரணிலின் வெற்றி இலகுவாகி விடுமென்பது ஐக்கிய தேசிய கட்சியினரின் கணிப்பு.

ரணிலுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கும் நிலையில், ரணிலே அடுத்த ஜனாதிபதியென ஐக்கிய தேசிய கட்சியினர் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

இப்படியானதொரு ரணிலுக்கு சாதகமான நிலை ஏற்படாது தடுக்க இரண்டு செயற்பாடுகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதலாவது - கோதபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கொலை சம்பந்தப்பட்ட வழக்கு. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி பல சந்தேகங்கள் உண்டு.

புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு இந்த வழக்குகளில் ஆழமாக உள்ளது என்று சில ஊடகங்கள் வாயிலாக கோதபாய தெரிவித்துள்ளார். நாய் எங்கு அடிபட்டாலும் காலைத் தூக்கியவாறு ஊளையிடுவது போன்ற கதையிது.

அடுத்தது - ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்கத் தூண்டிவிடும் நடவடிக்கை. சஜித்தின் நேர்த்தியான அரசியல் பணிகளை வியந்து பாராட்டி வரும் ஜனாதிபதி மைத்திரி அவரை வேட்பாளராக்க தூண்டிக் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

இந்த சதித்திட்டத்தின் எதிரொலியாக ரணிலின் கையாளான ரவி கருணநாயக்கவும், சஜித் பிரேமதாசவும் சாதிப் பெயர்களைக் கூறி பொது அரங்குகளில் மோத ஆரம்பித்துள்ளனர்.

கோதபாய போட்டியிடுவது மைத்திரிக்குப் பாதகமாகவும், சஜித் போட்டியிடுவது ரணிலுக்குப் பாதகமாகவும் அமையுமென்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கோதபாயவும் சஜித்தும் ஏதாவதொரு வகையில் களத்திலிருந்து வெளியேற்றப்படுவார்களானால் மைத்திரியும் ரணிலும் எதிரும் புதிருமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடும்.

கடந்த வருடம் 51 நாட்கள் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிழந்தும் அலரி மாளிகையில் குடிகொண்டிருந்தபோதே மைத்திரியை எதிர்த்துக் களமிறங்கும் முடிவு எடுக்கப்பட்டதென்பது உலகறிந்த ஒன்று.

இந்தப் பின்னணியில், அமெரிக்க வழக்கையும் பார்க்க வேண்டும்.

2009 ஜனவரி 8ஆம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் கோதபாய ராஜபக்ச மீது கடந்த மாத முற்பகுதியில் அமெரிக்க  நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்குதல் செய்தார்.

இக்கொலையில் கோதபாயவுக்கு இருந்த சம்பந்தம் பற்றி பொதுமேடைகளிலும் நாடாளுமன்றிலும் அவ்வப்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

லசந்தவின் மகளும் கோதபாயவை இக்கொலையில் சம்பந்தப்படுத்தி கருத்து வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த கோதபாய, லசந்தவின் மகள் இலங்கைக்கு வந்து தம்மைச் சந்தித்தால் கொலைக்குற்றவாளி யார் என்பதை தம்மால் தெரிவிக்க முடியுமென்று தெரிவித்திருந்தார்.

இவர் தெரிவித்திருந்தது உண்மையென்றால், அமெரிக்காவில் தாக்கலாகியுள்ள வழக்கு அதற்கான சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கியிருப்பதாக கருத இடமுண்டு.

இவ்வழக்கு விசாரணைக்கு நேரடியாகத் தோன்றும்போது அல்லது தமது சட்டத்தரணியினூடாக லசந்தவின் கொலையாளி யார் என்பதை கோதபாய தெரிவிக்க வேண்டும். இதனையே லசந்தவின் மகளும் எதிர்பார்ப்பார்.

இதனைவிட்டு, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தம்மைத் தடுக்கவே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழரும் ஐக்கிய தேசியக் கட்சியும் இருப்பதாகவும் புலம்புவதில் அர்த்தமில்லை.

இவ்வழக்குத் தொடர்பாக மற்றொரு கருத்தை மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

கோதபாய மீதிருக்கும் பயமே அவர் மீது வழக்குத் தாக்கல் செய்ய காரணமென்பது இவரது கருத்து. ஒருவகையில் இதனை சரியாகவே கொள்ளவும் இடமுண்டு.

முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் காhணமல் போகவும், விசாரணகைகுக் கொண்டு செல்லப்பட்டவர்கள் காணாமலாக்கப்படவும் காரணமாக இருந்தவர்கள் மீது எவ்வாறு பயமில்லாது போகும்?

மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அத்தனை கொலைகளுக்கும் கோதபாயவே பொறுப்புக் கூற வேண்டியவர் என்பதில் இரண்டாம் பேச்சுக்கு இடமில்லை. இதற்கான உயிருள்ள ஒரு சாட்சியாக யுத்தகால இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இருப்பதையும் மறந்துவிடக்கூடாது.

கோதபாய மீதான அமெரிக்க நீதிமன்ற வழக்கு இலங்கை நீதித்துறை வழங்கத் தவறிய நியாயத்தை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனூடாக எதிர்காலங்களில் மேலும் பல கொலைகளுக்கான நீதிக் கதவு திறக்கப்படலாம்.

No comments