கடத்தப்பட்டு சவுதி அரேபியாவில் விற்கப்பட்ட இந்திய பெண்கள்

மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று 14 இந்திய பெண்களை சவுதி அரேபியாவில் விற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திரிபுராவைச் சேர்ந்த ஒரு பெண் துபாய்க்கு கடத்தப்படவிருந்த நிலையில் அப்பெண்ணை உத்தரபிரதேச காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இந்த சூழலில், துபாயில் நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பெண்ணை கடத்திய ருமானா பேகம் என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மனித கடத்தல் சம்பவத்தில் ருமானா பேகம் முக்கிய நபராக செயல்பட்டது மட்டுமல்லாமல், இதற்கு முன்பு 14 பெண்களை கடத்தியிருப்பதும் அம்பலமாகியுள்ளது.

தற்போது மீட்கப்பட்ட பெண்ணுக்கு 20,000 ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக இவர் உறுதியளித்திருக்கிறார். இதே போல், கடத்தப்பட்ட பிற பெண்களிடம் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாக கூறி அரபு நாடுகளில் அப்பெண்களை மனித கடத்தல் கும்பல் விற்றிருக்கிறது.

சம்பந்தப்பட்ட நாட்டுக்கு அப்பெண்களை அழைத்து சென்றவுடன் கடவுச்சீட்டை பறித்துக்கொண்டு பாலியல் மற்றும் உடல் ரீதியான சுரண்டலில் பெண்களை ஈடுபடுத்தியதாக கூறப்படுகின்றது.

2016ல் மனித கடத்தல் தொடர்பாக வெளியான அமெரிக்க அரசின் அறிக்கையில், கட்டாய வேலை மற்றும் மனித கடத்தல் உள்ளிட்டவை நடக்கும் இடமாக இந்தியா இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், மனித கடத்தலை குறைந்தபட்சமாக களைவதற்கான ஒழுங்குமுறைக்கூட இந்தியாவிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் முதன் முறையாக மனித கடத்தலுக்கு எதிரான மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டிருந்தாலும், அது இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பிலேயே இருக்கின்றது. அதற்கு, மோடி தலைமையிலான போதிய அளவு முன்னுரிமை அளிக்கவில்லை என்ற விமர்சனமும் வைக்கப்படுகின்றது.

No comments