வடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டில் பல பாகங்களிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வடக்கிலும் தேவாலயங்கள், பிரசித்தி பெற்ற இடங்கள் என முக்கிய இடங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண சபை வளாகத்தைச் சூழவும் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை வளாகத்தில் பல திணைக்களங்கள் மற்றும் மாகாண அமைச்சுக்களின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இவற்றுக்கு மக்கள் நாளாந்தம் வருகை தந்து சேவைகளைப் பெற்றுச் செல்கின்றனர்.

அத்துடன் வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் பிரதிப் புதன்கிழமைகளில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் பொதுமக்கள் சந்திப்பு நடைபெற்று வருவது வழக்கம். எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த பொதுமகள் சந்திப்பு இன்று புதன்கிழமை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

No comments