புலிகள் மீது போட்ட வீண்பழி

மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் காவலரண் மீது நடாத்தப்பட்ட தாக்குதலே தவ்ஹித் ஜமாத் அமைப்பு மற்றும் ISIS அமைப்பு இணைந்து நடாத்திய முதலாவது தாக்குதல் என கைது செய்யப்பட்ட முஸ்லிம் தீவிரவாதி தகவல் வழங்கியுள்ளாா்.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமினின் சாரதி என கூறப்படும் நபர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.

சஹ்ரான் ஹசீமின் சாரதி நேற்று காத்தான்குடி பிரதேசத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த சந்தேகநபரிடம் நடத்திய விசாரணைகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் காவலரணில் இருந்த தமிழ் மற்றும் சிங்கள பொலிஸார் இருவரை சஹ்ரான் ஹசீமின் ஆதரவாளர்களே கொலை செய்ததாக கூறியுள்ளார்.

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு நடத்திய முதல் தாக்குதல் இது என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஹசீமின் சாரதியிடம் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை இத்தாக்குதலை விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளே நடத்தியதாகக் கூறி கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் அத்தாக்குதலை முஸ்லீம் தீவிரவாதிகளே நடத்தியிருந்தமை அம்பலமாகியுள்ளது.

No comments