பாராளுமன்ற அனுமதிப் பத்திரங்களுடன் கைதான இளைஞனுக்கு விளக்கமறியல்

பாராளுமன்ற வளாகத்திற்கான வரைப்படம் மற்றும் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கான 6 அனுமதிப்பத்திரங்களுடன் பலாங்கொடை – கிரிமெட்டிதென்ன பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொடை பிரதம நீதவான் ஜயருவன் திசாநாயக்க முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 6ஆம் திகதி வரை, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொடை கிரிமெட்டிதென்ன பகுதியில் கடந்த 24 ஆம் திகதி சந்தேகத்திற்கிடமான வீடு மற்றும் வாகனமொன்றை சோதனைக்குட்படுத்தியபோது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதிப்பத்திரங்கள், சிம் அட்டைகள், துப்பாக்கி ரவைகள் மற்றும் வீதி வரைபடங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் கெப் வண்டியில் பொருட்கள் வைப்பதற்கான போலி தட்டொன்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்திற்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பலாங்கொடை – கிரிமெட்டிதென்ன பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments