மைத்திரி கோத்தா கொலைச்சதி - நதீமால் பெரேராவிடம் விசாரணை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீதான கொலைச் சதி முயற்சி தொடர்பில் டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேராவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சதி முயற்சியுடன் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவுடன் பாடகர் அமல் பெரேராவும், நதீமால் பெரேராவும் மிகவும் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தனர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அமல் பெரேராவும், நதீமால் பெரேராவும் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே மதுஷின் மிக நெருங்கிய நண்பர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்தக் கொலை சதி முயற்சி தொடர்பிலும் மதுஷின் பெயரும் பல இடங்களில் சம்பந்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மாக்கந்துரே மதுஷ் மற்றும் பாடகர் அமல் பெரேரா ஆகியோரிடையே காணப்பட்ட தொடர்பு தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக நதீமால் பெரேராவிடம் நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது என குற்றப்புலனாய்வுத் திணைக்களத் தகவல்களை மேற்கோள்காட்டி இன்றைய சிங்கள நாளிதழொன்று அறிவித்துள்ளது.

பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே மதுஷ் மற்றும் அமல் பெரேரா ஆகியோர் தற்போது டுபாய் பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments