அவதானமாக இருங்கள் - மின்னல் தாக்குதல் குறித்து எச்சரிக்கை

கடும் வெப்பமான காலநிலையின் பின்னர் மாலை வேளைகளில் மழை பெய்யும்போது மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள இடர் முகாமைத்துவப் பிரிவு, அது தொடர்பாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

“மழை பெய்யும்போது மைதானம், வயல்கள், கடலில் நிற்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக மின்சார வடங்கள் தற்போது மின் இணைப்புக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள மின்சாரம் வழங்குமு் தொதிதி மற்றும் மின்சாரக் கம்பங்களுக்கு அருகே நிற்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வீடு மற்றும் வேலைத் தளங்களில் மின் சாதனங்களின் மின் இணைப்புக்களை நிறுத்திக் கொள்ளவது, மின்னலால் ஏற்படும் மின் ஒழுக்கில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும். தொலைக்காட்சி அன்ரனா இணைப்புகளையும் துண்டித்துக் கொள்ளுதல் பாதுகாப்பானதாக அமையும். அண்மையான பிரதேசத்தில் மின்னல் தாக்கம் ஏற்படும் போது இரு கால்களையும் சேர்ந்து நிலத்தில் குந்தி அமர்ந்து கொள்வது பாதுகாப்பானதாக இருக்கும்.

மின்னல் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் வருடம்தோறும் 70 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கின்றனர். மக்கள் அவதானத்துடன் செயற்படுவதன் ஊடாகவே தேவையற்ற இடர்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், குப்பிளானில் நேற்று மதியம் மின்னல் தாக்கி இரு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேற்கண்டவாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments