இயக்குநர் மகேந்திரன் இயற்கை எய்தினார்!


தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெரிதும் விரும்பப்பட்ட தென்னிந்திய தமிழ் சினிமா இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் மகேந்திரன் இயற்கை எய்தியுள்ளார். தமிழீழத்தில் ஒரு அகலத்திரைக்காவியம் உருவாவதற்கும் அதனை தானே நேரடியாக நின்று நெறிப்படுத்தியவரும் இயக்குநர் மகேந்திரன் முக்கியமானவரென நினைவுகூரப்பட்டுள்ளது.

தமிழீழத்தில் முதன் முதல் அகலத்திரைக் காவியமாக உருவாக்கப்பட்ட ஆணிவேர் என்ற படத்தினை இயக்கி நிதர்சனம் நிறுவனத்தின் போராளிகள் பலரை திரைப்படத்துறை சார்ந்து கற்பித்துக்கொடுத்த ஒரு நல்லாசான் இன்று எம்மோடில்லையென ஊடகவியலாளர் சிவகரன் நினைவு கூர்ந்துள்ளார்.

வன்னி வந்திருந்த போது இயக்குநர் மகேந்திரனை சேரலாதன் பொறுப்பேற்று கௌரவப்படுத்தினார்.இன்று இவர் இந்த உலகைவிட்டு சென்றுவிட்டார். சேரலாதன் அண்ணரும் இறுதிப் போரில் வீரமரணம் அடைந்துவிட்டார். சினிமாவில் நிஐத்தில் இருவரைக் கண்ட மண் இதுவென நினைவுகூர்ந்துள்ளார் கவிஞர் செல்வகுமார்.

தெறிபடத்தில் வில்லனாக நடிகராகவும் அவர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது தெரிந்ததே.

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 79. யதார்த்த சினிமாவின் இயக்குநர் என வர்ணிக்கப்படும் இயக்குநர் மகேந்திரன் 1978-ம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படம் மூலம் அறிமுகம் ஆனவர்.
தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், இயக்குநர் பாலு மகேந்திராவிற்கு மிகவும் பிடித்த இயக்குநர் என பெயர் பெற்றவர் மகேந்திரன்.

தமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தார்.. அதற்காக அவ்வப்போது டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டார். இன்னிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்

No comments