வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாம்


குண்டுத் தாக்குதல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் அமைவாக வடக்கு  மாகாணத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வட மாகாண சிரேஸ்ர காவல்துறை  மா அதிபர்  றொசான் பெர்னாந்து தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் காவல் துறை  அதிகாரிகள் மற்றும்  சர்வமத குருமார்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோருடனான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்ற வருகிறது. காவல் துறை  தலைமையகத்தின் பணிப்புக்கமைய இவ்வாறான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்தில் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் பங்களிப்புடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  அந்த  வகையில் வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல் துறை  மா அதிபர்  மகிந்த குணரட்ன,கிளிநொச்சி காவல் துறை  அத்தியட்சர் ஜெயந்த ரத்நாயக்க  சர்வ மதத்தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments