மீண்டும் முல்லையில் ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு!


வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள் தொடர்பில் செய்தி அறிக்கையிட முற்படும் தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவது தொடர்கின்றது. குறிப்பாக காணாமல் போனோர் விவகாரம், போரினால் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் நிகழ்வுகள், சிங்கள மற்றும் பௌத்த மயமாக்கல்கள், இராணுவ மயமாக்கல்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சித்து நடத்தப்படும் போராட்டங்களினை அறிக்கையிடும் ஊடகவியலாளர்களு மிகவும் மோசமான அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான அச்சுறுத்தலொன்றை எதிர்நோக்கி முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் நாளை வியாழக்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக  முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை கையகப்படுத்தி வைத்துள்ள இலங்கை இராணுவத்திற்கு குறித்த காணியை நிரந்தரமாக கையகப்படுத்த எடுத்த முயற்சி தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற போது தவசீலன் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டிருந்தார். இது குறித்து தவசீலன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததை அடுத்து இனிவரும் காலங்களில் தவசீலனுக்கு இடையூறை ஏற்படுத்த மாட்டோம் என்று இராணுவத்தினர் உறுதியளித்திருந்தனர்.

இந்நிலையில் அண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்கள் நடத்திய ஊர்வலத்தின் போது மக்களையும் ஊடகவியலாளர்களையும் புகைப்படமெடுத்த கடற்படையினரை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டில் விசாரணைக்கு வருகை தர அவர் அழைக்க்பபட்டுள்ளார்.

No comments