சர்வதேச சட்டங்களின்படி கோத்தாவே பொறுப்புக்கூறவேண்டும்

அனைத்துலக சட்டங்களின்படி, சிறிலங்கா படைகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்களுக்கு கட்டளை வழங்கியவர் என்ற வகையில், கோத்தாபய ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டியவர் என்று அனைத்துலக சட்ட நிபுணர் ஸ்கொட் கில்மோர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில், றோய் சமாதானம் என்ற கனடாவைச் சேர்ந்த தமிழரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிவில் வழக்கை சட்ட நிபுணர் ஸ்கொட் கில்மோர் கையாளவுள்ளார்.

இவர், ஊடகவியலாளர் மேரி கொல்வின் 2012ஆம் ஆண்டு சிரியாவில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக , சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராக 300 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கை நடத்தியவராவார்.

றோய் சமாதானம் கொழும்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருந்து சித்திரவதை செய்யப்பட்டிருந்தார். அதற்கு இழப்பீடு கோரியே கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை கோத்தாபய ராஜபக்ச அறிந்திருந்தார் என்றும், தன்னை தடுத்து வைத்திருந்தவர்களுடன் கோத்தாபய ராஜபக்ச தொலைபேசியில் பேசியதை தாம் ஒரு முறை கேட்டதாகவும், றோய் சமாதானம் தெரிவித்துள்ளார்.

No comments