ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவேந்தலும்: ''நினைவுகளுடன் பேசுதல்'' நூல் வெளியீடும்

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் 'நினைவுகளுடன் பேசுதல்..." நூல் அறிமுக நிகழ்வும் கடந்த 09.03.2019
சனிக்கிழமை பி.ப.15.00 மணிக்கு பிரான்ஸ் ஊடகமையத்தின் ஏற்பாட்டில் லாக்கூர்நொவ் பகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை  நாட்டுப்பற்றாளர் அன்ரனி சந்தியோகு பிரான்சிஸ்      அவர்களின் துணைவியார் திருமதி பிரான்சிஸ் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி  அவர்களின் புதல்வி செல்வி சிந்து சத்தியமூர்த்தி அவர்கள் ஏற்றிவைத்தார்.

திருஉருவப்படத்திற்கான மலர்மாலையை உடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் துணைவியார் திருமதி நந்தினி சத்தியமூர்த்தி அவர்கள் அணிவித்தனர்.
 அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர் வணக்கம் செய்தனர். தொடர்ந்து தலைமையுரையினை  ஊடகமையத்தின் உபதலைவரும் ஈழமுரசின் ஆசிரிய குழுவைச் சேர்ந்தவருமான திரு.க.பகீரதன் அவர்கள் ஆற்றியதைத் தொடர்ந்து - நினைவுப் பகிர்வினை  செல்வி சிந்து சத்தியமூர்த்தி ஆற்றியிருந்தார். தொடர்ந்து நினைவுரைகளை  ஊடகவியலாளர் திரு.றொபேட், தமிழீழ மக்கள் பேரவையின் பேச்சாளர் திரு.மோகனதாஸ் ஆகியோர் ஆற்றியதைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி   அவர்களின் நினைவு சுமந்த காணொளி திரையிடப்பட்டது.

மேலும் நினைவுரைகளை  மூத்த ஊடகவியலாளர்  திரு.குமாரதாஸ், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளிவிவகார பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்கள், மூத்த ஊடகவியலாளர் திரு.துரைசிங்கம், தாயகத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிவரை நின்று மருத்துவத்தை மேற்கொண்ட மருத்துவர் திரு.நா.வண்ணன், முன்னாள் தமிழீழக் காவல்துறை அதிகாரி திரு.ரஞ்சித்குமார் ஆகியோர் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இடைவேளையைத் தொடர்ந்து 'நினைவுகளுடன் பேசுதல்" நூல் அறிமுகம் இடம்பெற்றது. முதற்பிரதியை ஊடகமையத்தின் முக்கிய உறுப்பினர் திரு.சோதி அருளப்பு வெளியிட்டு வைக்க திருமதி தமிழன்பன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நூல் அறிமுக உரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் 'நினைவுகளுடன் பேசுதல்" நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், ஈழமுரசின் காத்திரமான பங்கு குறித்தும் எடுத்துரைத்திருந்தார்.

நன்றியுரையினை ஈழமுரசின் ஆசிரிய குழுவைச் சேர்ந்த திரு.கோபிராஜ் அவர்கள் ஆற்றியதைத்தொடர்ந்து, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்தபோது அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்டிநின்றனர். தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.

No comments