பேரணியின் முக்கியத்துவம் உணர்ந்து சனிக்கிழமை அணி திரழுங்கள்


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 40ஆவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலப்படுதியில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் நிரந்தர மற்றும் பயனுறுதி வாய்ந்த தீர்வை நோக்கி நகர்த்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் வரும் சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் பேரணி முக்கியத்துவம் வாய்ந்த்து என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத் தலைவர் திருமதி கோசலை மதன் மேலும் தெரிவித்ததாவது:

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையானது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பேசக்கூடிய களமாகவும், தீர்வை நோக்கிச் சம்மந்தப்பட்டவர்களைத் தள்ளுகின்ற விசையாகவும் காணப்படுகிறது.ஆ

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள்,மனித உரிமை மீறல்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கவனத்திற்குப் பல்லேறு தடவைகள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு பல்வேறு தீர்வு யோசனைகள் முன்வைக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டும் உள்ளன.

ஆனாலும் இலங்கை மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் சபையினால் பரிந்துரைக்கப்படும் ஆலோசனைகள் இலங்கை அரசினால் கருத்திற்கொள்ளப்பட்டு உரிய முறையில் செயற்படுத்தப்படாமையை நாங்கள் அவதானிக்கின்றோம்.

இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் முன்வைக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய குற்ற விசாரணைகளை ஆரம்பிக்க வல்லதான நீதிமன்றப் பொறிமுறையொன்று இன்னமும் அமைக்கப்படவில்லை.மாறாக போர்க்குற்ற விசாரணை தொடர்பான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசு கால அவகாசம் கேட்கின்ற நிலையும், மனித உரிமைகள் சபையானது அதற்கான அவகாசத்தை வழங்குகின்ற நிலைமையுமே காணப்படுகிறது.

இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை வலுப்படுத்தி உடனடித் தீர்வையும் நீதியையும் நோக்கி அவர்களை நெறிப்படுத்தும் வகையிலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகம் மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்றை வரும் 16ஆம் திகதி  யாழ்ப்பாணத்தில் நடாத்தத் திட்டமிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி பல்வேறு போராட்டங்கள் நாடு முழுவதும் நடாத்தப்பட்டு உள்ளன – நடாத்தப்பட்டும் வருகின்றன. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெற்றுக் கொள்வதாய் இல்லை.

எனவே பொது மக்கள், மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் முதலான அனைத்து வலுமிக்க சக்திகளையும் ஒன்று திரட்டி உள்ளுரிலும், சர்வதேச தளத்திலும் நீதிக்கான செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதே இந்தப் பேரணியின் நோக்கம் ஆகும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் சபையின் 40ஆவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலப்படுதியில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் நிரந்தர மற்றும் பயனுறுதி வாய்ந்த தீர்வை நோக்கி நகர்த்த  முனையும் எமது இந்த செயற்பாடு மாற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என யாழ் பல்கலைக்கழக சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது – என்றார்.

No comments