தமிழ் வளர்ச்சி குறித்து தொலைக்காட்சிகள் பதிலளிக்க வேண்டும்; நீதிபதிகள்!
மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, உலகத் தமிழ்ச்சங்கத்தில் நூலகம், ஆராய்ச்சி அரங்கு அமைக்க அரசு ரூ.12.25 கோடி ஒதுக்கியுள்ளது. தொடர்ந்து தமிழ்ச்சங்க மேம்பாட்டுக்கு தமிழக அரசு தேவையான நிதியுதவிகளை செய்து வருகிறது என அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.
இதையடுத்து கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ் மொழியை வளர்க்க எடுக்கப்படும் முயற்சியில் சிறிதளவு முயற்சி கூட, தமிழர்கள் அதிகம் வாழும் தமிழகத்தில் எடுக்கப்படுவதில்லை. தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் தமிழ் வளர்ச்சிக்காக தினமும் பத்து நிமிடங்கள் ஒதுக்கினால் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து தமிழ் சேனல்களையும் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 26-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Post a Comment