சுமந்திரனிற்கு ஞானம் வந்தால் வரவு செலவுத்திட்டத்தை எதிர்க்கட்டும்?
இம்முறை நடைபெற்ற மனித உரிமைகள் சபையில் எமது இனப்படுகொலை செய்த இராணுவத்தை காப்பாற்றும் வகையில் அங்கு சென்று செயற்பட்டுவிட்டு சர்வதேசவிசாரணை பொறிமுறைவேண்டும் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு செல்வோம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியமை முதலை கண்ணீர் விடும் செயலுக்கு ஒப்பானது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைபரப்பு செயலாளர் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணி கிளிநொச்சிமாவட்டபணிமனையில் கட்சியின் கிளிநொச்சி மாவட்டஅரசியல் செயற்பாட்டாளர்களுக்கான அரசியல் பயிலரங்கு இன்று ஞாயிறுக்கிழமை தொடங்கி வைத்து உரை ஆற்றும்போதே அருந்தவபாலன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்குமேலும் தெரிவிக்கையில்,எமது கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரன் கலப்பு நீதிமன்றம் தொடர்பில் வெளியிட்ட கருத்தை திரிபுபடுத்தி சுமந்திரன் சிலஊடகங்களுக்கு அறிக்கை விடுத்திருப்பது வேடிக்கையான விடயம். இது முதலைகண்ணீர் வடிக்கும் செயற்பாட்டுக்கு ஒப்பானது.
இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட கலப்புநீதிமன்றம் ஒன்றை சட்டரீதியாக அமைக்க முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் வாதம் தவறானது என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே நீதியரசர் பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன குழுவை ஒரு உதாரணமாக எமது கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரன் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அறிக்கையின் எந்த இடத்திலும் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழுவை போன்ற ஒரு குழுவை அமைக்கவேண்டும் என்று அவர் குறிப்பிடவில்லை.
இவ்வாறு, மனித உரிமைகள் சபையில் இலங்கையை காப்பாற்றி விட்டுவந்து, சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் குற்றவியல் நீதிமன்றத்துக்கு செல்லநேரிடும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கதை விட்டுவருவதன் பின்னணியை எமது மக்கள் உணருவார்கள். சர்வதேச விசாரணை எப்போதோ முடிந்துவிட்டது என்று மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் செய்து வந்த சுமந்திரன் இன்றைய பத்திரிகைஒன்றில் “சர்வதேசவிசாரணை”பற்றி வலியுறுத்தியமை வேடிக்கையான விடயம்.
தேர்தலை கருத்தில் கொண்டே சர்வதேச விசாரணை பொறிமுறையை சுமந்திரன் தூக்கிப்பிடித்துள்ளார் என்பது சாதாரணமக்களுக்கும் இன்றுவிளங்கும். தொடர்ந்து அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து ஆதரவாக செயற்பட்டுவரும் சுமந்திரன் இவ்வாறு வேடிக்கையான குற்றச்சாட்டுக்களை சுமத்துவது விடுத்து இனிமேலாவது பாதிக்கப்பட்டமக்களின் உணர்வுகளை அறிந்து செயற்படவேண்டும். முடிந்தால்,எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவிருக்கும் வரவுசெலவு திட்டவிவாதத்துக்கு எதிராக வாக்களித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசுவாசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நடந்து காட்டட்டுமென ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment