எஸ்.ரி.எவ் மீதான தாக்குதல் - 3 பெண்கள் உட்பட ஐவருக்கு பிணை நிராகரிப்பு

அரியாலை கிழக்கில் மணல் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்கச் சென்ற  சிறப்பு அதிரடிப்படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட 3 பெண்கள் உள்பட 5 பேர் சார்பான பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நிராகரித்தது.

அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப் படையினருக்கும் மணல் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனையடுத்து மணல் வியாபாரிகளால் தாக்கப்பட்டனர் எனத் தெரிவித்து சிறப்பு அதிரடிப் படையினர் மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

அத்துடன்., சிறப்பு அதிரடிப் படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட ஐந்து பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், சந்தேகநபர்களுக்குச் சொந்தமான
இரண்டு சவல்கள், மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றும் உழவு இயந்திரம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

அவர்கள் ஐந்து பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்களை  வரும் ஏப்ரல் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் சந்தேகநபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ் நகர்த்தல் பத்திரம் அணைத்து நேற்று நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.

வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

“சந்தேகநபர்கள் இருவர் மீது சிறப்பு அதிரடிப் படையினர் தாக்குதல் நடத்தினார்கள். அதனைத் தடுக்கச் சென்ற பெண்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டனர். அதனால் இருதரப்புக்கும் முரண்பாடு ஏற்பட்டது. எனவே சந்தேகநபர்கள் ஐவரையும் பிணையில் விடுக்கவேண்டும்” என்று சட்டத்தரணி மு.றெமிடியஸ் சமர்ப்பணம் செய்தார்.

“அரியாலை கிழக்கில் தொடர்ச்சியாக   மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து அதனை முறிக்க சிறப்பு அதிரடிப்படையினர் நால்வர் இரண்டு மோட்டார் சைக்கிளில் கடந்த சனிக்கிழமை இரவு அங்கு சென்றிருந்தனர்.

அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த உழவு இயந்திரத்தைத் தடுக்க முற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனையடுத்து உழவு இயந்திரத்தில் சென்ற ஒருவரை அதிரடிப் படையினர் கைது செய்தனர்.

அதனையடுத்து அங்கு வந்த பெண்கள் மூவர் அதிரடிப்படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர். சந்தேகநபர்கள் ஐவரும் சேர்ந்து சிறப்பு அதிரடிப்படையினரைத் தாக்கியதால் அவர்களில் சீருடை கிழிந்த்துடன் தாக்குதலுக்கும் உள்ளாகினர்.

சிறப்பு அதிரடிப் படையினர் மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் அங்கு விரைந்தனர். விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனடிப்படையிலேயே சந்தேகநபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர்” என்ற பொலிஸார், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், பிணை விண்ணப்பதை நிராகரித்து சந்தேகநபர்களின் விளக்கமறியலை ஏப்ரல் முதலாம் திகதிவரை நீடித்து வழக்கை ஒத்திவைத்தார்.

No comments