குற்றச்சாட்டு சுமத்தப்படும் அதிகாரிகளை இடைநிறுத்த வேண்டும் – சாலிய பீரிஸ்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில், தமது செயலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை, சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் கலாநிதி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இடைக்கால நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக, பணியகத்தின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்த இடைக்கால நிவாரணத்தை வழங்கும் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அத்துடன், நீதியுடன் தொடர்புடைய பரிந்துரைகளையும் குறிப்பாக, கடத்தல்கள்,  மற்றும் தொடர்புடைய குற்றங்களுடன் தொடர்புபட்ட குற்றவியல் நடவடிக்கைகளில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட அரசாங்க அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்துவது தொடர்பான பரிந்துரைகளையும், சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஒரு நாடு என்ற வகையில்,  உண்மை , நீதியை வழங்குதல்,  காணாமல் போனோரின் குடும்பங்களின் உரிமைகளை பெற்றுக் கொடுத்தல் எமது கடமையாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோருக்கான பணியகம் உருவாக்கப்பட்ட ஆறு மாதங்களில், கடந்த 2018 செப்ரெம்பர் மாதம், இடைக்கால அறிக்கையை சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமரிடம் கையளித்திருந்த போதும், அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments