ஆளுநரிடம் அனந்தி,சிவாஜி முறைப்பாடு கையளிப்பு!


வட மாகாண ஆளுநர் தனது ஜெனீவா பயணத்தில் மும்முரமாகியுள்ள நிலையில் மக்கள் பிரதிநிதிகளும் ஜெனிவா தொடர்பான தமது கோரிக்கைகளினை தனக்கு வழங்கலாமென அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் கடந்தமாதம் ஆரம்பமாகியுள்ளதுடன் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை இலங்கை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

இந்த நிலையில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமய தலைவர்கள் ஆகியோர் ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் வட மாகாணம் சார்ந்து முன்வைக்க வேண்டியதென கருதும் தமது கோரிக்கைகளை தன்னிடம் எழுத்துமூலம் சமர்ப்பிக்கலாமென ஆளுநர் அறிவித்துள்ளார்.


இதற்கான கடிதம்;குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு நேற்று (08) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தமது கோரிக்கைகளினை ஆளுநர் செயலகத்தில் சமர்ப்பிக்க முடியும். இதேவேளை பொதுமக்கள் தமது கோரிக்கைகளினை எதிர்வரும் 13ஆம் திகதி கைதடி முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெறும் மக்கள் சந்திப்பில் இதற்கென விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் கையளிக்க முடியும்.

இதேவேளை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் ஜெனிவாவில் சமர்ப்பிக்க வேண்டியதென கருதும் தமது கோரிக்கைகளை இன்று (09) முற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தனர். ஆளுநரின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோர் இந்த கோரிக்கை கடிதத்தை ஆளுநர் சார்பாக பெற்றுக் கொண்டிருந்தனர் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

No comments