இனப் படுகொலையாளிகளை மன்னிக்க மாட்டோம்

“மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் நாம் ஆடு, மாடுகளை இலங்கை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவில்லை. எமது இரத்த உறவுகளையே ஒப்படைத்தோம்.”

– இவ்வாறு காணாமல்போனோரின் உறவுகள் தெரிவித்தனர்.

“வீட்டில் இருந்தவர்களையும், எமது பிள்ளைகளையும், கடலுக்குச் சென்றவர்களையும் பிடித்துச் சென்று காணாமல் ஆக்கிய நிலையில் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு கூற முடியும்?” எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

நேற்று மாலை மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

“இலங்கை அரசுக்குக் கால அவகாசம் வழங்கக் கூடாது எனவும், இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணையே வேண்டும் எனவும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சார்பில் நாம் தொடர்ந்தும் போராடி வருகின்றோம். இந்த மாதத்துக்குள் நாங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

இங்கு ‘மறப்போம் மன்னிப்போம்’ என்பதற்கு இடமே இல்லை. நாங்கள் ஆடு, மாடுகளை இராணுவத்தினரிடம் கொடுக்கவில்லை. எமது இரத்த உறவுகளையும், வீட்டில் இருந்தவர்களையும், எமது பிள்ளைகளையும், கடலுக்குச் சென்றவர்களையும் அவர்கள் பிடித்துக்கொண்டு சென்றுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் இருக்கிறார்களோ, இல்லையோ என்பதை நீதியுடன் கூறவேண்டும்.

இலங்கை அரசில் நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே நாங்கள் ஐ.நாவை நம்பியுள்ளோம்” – என்றார்.

No comments