கண்ணிவெடி மற்றும் துப்பாக்கி ரவைகள் கண்டெடுப்பு

மயிலிட்டி பகுதியில் விடுவிக்கப்பட்ட காணியில் சுவர் கட்டும் பணிக்காக ஏற்கனவே இருந்த அத்திவாரத்தை கிண்டியபோது இரண்டு கண்ணிவெடிகளும் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதான வீதி, மயிலிட்டியில் அமைந்துள்ள குறித்த காணியை துப்பரவு செய்து சுற்று மதில் அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த அத்திவார பகுதியை கிண்டும் பணி நேற்று புதன் கிழமை நடைபெற்றுள்ளது. இதன்போது இரண்டு கண்ணிவெடிகளும் நூல் சாக்கில் பொதி செய்யப்பட்ட துப்பாக்கி ரவை தொகுதியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காணி உரிமையாளரால் அப்பகுதி கிராம அலுவலருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இன்று காலை குறித்த இடத்தை பார்வையிட்ட கிராம அலுவலர் பலாலி காவல்துறைக்கு தகவல் வழங்கியிருந்தார். காலை 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த பலாலி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வெடிபொருட்களை அகற்றும் பிரிவிற்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இதையடுத்து வருகை தந்த வெடிபொருள் மீட்பு பிரிவினரால் மதியம் 1.30 மணியளவில் குறித்த கண்ணிவெடிகள் மற்றும் துப்பாக்கி ரவை தொகுதி என்பன பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த காணி உள்ள பகுதி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் ஆபத்தான வெடி பொருட்கள் நிலத்திற்கடியில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றமை அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

செய்தி மற்றும் படங்கள் - இரா.மயூதரன்.

No comments