சிறிதரன் வழியில் அங்கஜனது குழுவும் அடாவடி - ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்குச் சொந்தமான கப்பிற்றல் ரி.வி நிறுவனத்தினரால் இன்றும் சட்டத்திற்குப் புறம்பான முறையில் யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கேபிள் ரி.விக்கான மின்கம்பங்கள் நாட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது அவற்றினை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதோடு குறித்த ஊடகவியலாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டடுள்ளார்.

அவரை அச்சுறுத்தும் வகையில் குறித்த மின்கம்பங்களை நாட்டிக்கொண்டிருந்தவர்கள் வீடியோப் பதிவுகளும் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மாதம் குறித்த கப்பிற்றல் ரி.வி நிறுவனத்தால் சட்டத்திற்குப் புறம்பான வகையில் கேபிள் ரி.விக்கான கம்பங்கள் நாட்டப்பட்ட நிலையில் அதனைத் தடுத்து நிறுத்திய யாழ்ப்பாணம் மாநகரசபையினர் குறித்த  கம்பங்களை மீள அகற்றியிருந்தனர். அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலேயே இன்றும் அடாத்தான முறையில் கேபிள் கம்பங்கள் நாட்டப்பட்டுள்ளன.

இதனை அறிந்த காலைக்கதிர் பத்திரிகையின் ஊடகவியலாளர் சம்பவ இடத்திற்குச் சென்று மின்கம்பங்கள் நாட்டப்படுவதை தனது செய்தி ஆதாரத்திற்காக வீடியோ பதிவாக்கிக்கொண்டிருந்தபோது மின்கம்பங்களை நாட்டிக்கொண்டிருந்த குழுவினரால் அவர் கடுமையாக எச்சரித்து அவர்களால் வீடியோ எடுக்கப்பட்டதோடு தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த வாரம் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனின் கறுப்புச் சட்டைக் கும்பல் குழப்பம் விளைவித்ததோடு ஊடகவியலாளர்களுககு அச்சுறுத்தலும் விடுத்திருந்தது. இதனையடுத்து நேற்று ஊடக சந்திப்பினை மேற்கொண்டிருந்த சிறிதரன் குறித்த வன்முறையுடன் தொடர்புடையதாக தனது கட்சியைச் சேர்ந்த மூவரை அடையாளம் கண்டுள்ளதாக கூறியதோடு அச் சம்பங்களிற்காக ஊடகவியலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தார்.

இந்நிலையில் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்குச் சொந்தமான கப்பிற்றல் ரி.வி நிறுவனத்தினரால் ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments