வன்னி வளங்களை சூறையாடும் இலங்கை அரசு!


விடுதலைப்புலிகள் வனத்தினை பாதுகாத்தார்கள் என்று பறைசாற்றுகின்ற இலங்கை ஜனாதிபதி மைதிரிபால சிறீசேன விடுதலைப்புலிகளின் நிர்வாக ஆளுகைக்குள் இருந்த பகுதிகளிலிருந்து  காடுகள் முதல் ,மணல்,கிரவல்,கருங்கல் என்பவற்றினை சூறையாடுவதை கண்டுகொள்ளவில்லையா என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடச்சியாக பல்வேறு இடங்களில் உள்ள இயற்கை வளங்கள் திருடப்பட்டு வருகின்றது.குறிப்பாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இருந்து கருங்கல் அகழ்வும் கொக்காவில் பிரதேசத்தில் இருந்து கிரவல் அகழ்வும் தொடர்ச்;சியாக இடம்பெற்றாலும் மாவட்டத்தின் ஆற்றுப்படுகை பிரதேசங்களில் இருந்து ஆற்றுமணல் களவாடப்படுவதுடன் மரங்கள் அறுக்கப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றது. இதன் பின்னணியில் சிங்கள ஒப்பந்தகாரர்களே பெருமளவில் உள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறும் மணல் அகழ்வு, கிரவல் அகழ்வு ,கருங்கல் அகழ்வு மற்றும் மரக்கடத்தல் என நீண்ட பட்டியல் காணப்படுகிறது. குறிப்பாக கொக்காவில் பகுதியில் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி பாரியளவில் கிரவல் மண் அகழப்படுகின்றது.

புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு நிதி செலுத்தப்பட்டு அனுமதி பெறப்பட்டே கிரவல் அகழப்படுகின்றது.எனினும், ஏ-9 வீதியிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்பட்டு  கிரவல் அகழப்பட்டுள்ளது.

இதேபோன்று பல ஆண்டுகளாக குறித்த பகுதியில் பல ஏக்கர் காணிகள், காடுகள் அழிக்கப்பட்டு பாரிய குழிகள் தோண்டப்பட்டும் இன்றுவரை அவை மூடி மீள் மரநடுகை மேற்கொள்ளாத போது புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அனுமதிகளை தொடர்ந்து எவ்வாறு வழங்குகின்றதென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

No comments