20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் ஜே.வி.பி கங்கணம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கக் கோரும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஜே.வி.பி. நாளை (22) முக்கிய பேச்சு நடத்தவுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெறும் என்றும், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத், சுனில் ஹந்துன்நெத்தி ஆகிய எம்.பிக்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் ஜே.வி.பியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஜே.வி.பி. தீவிரமாக இறங்கியுள்ளது.

இதற்கமைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து, ’20’ ஐ ஆதரிக்குமாறு ஜே.வி.பியினர் கோரிக்கை விடுத்தனர்.

20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கப்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தாலும், மஹிந்த அணியின் நிலைப்பாடு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, ’20’ குறித்து ஜே.வி.பியினர் பேச்சு நடத்தவுள்ளனர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி குறியாக இருக்கின்றது.

எனினும், ஐ.தே.க. தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அங்கம் வகிக்கும், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகியன எதிர்ப்பு வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments