வரவு செலவுத்திட்டத்தை கூட்டமைப்பு எதிர்க்கவேண்டும் - யாழில் ஜேவிபி

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு மற்றும் வரவு – செலவுத் திட்டம் ஆகியவற்றை எம்முடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கவேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்து கோரிக்கை விடுத்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது கூட்டமைப்பைத் தந்திரமாக ஏமாற்றி வருகின்றார் என்றும் அவர் சாடினார்.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்ட வரைவை தற்போதைய அரசு உருவாக்கி உள்ளது. ஆனால், முன்னர் இருந்த சட்டத்திலும் பார்க்கக் கடுமையான விடயங்கள் புதிய வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக போராட்டடங்களையோ அல்லது பேரணிகளையோ நாம் நடத்தினால் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க முடியும். இதனால் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன.

இந்தச் சட்ட மூலத்தின் ஊடாகப் பொலிஸார்தான் நபர் ஒருவரைக் கைதுசெய்ய வேண்டும் என்றில்லை. பாதுகாப்புத் தரப்பில் உள்ள யாராவது ஒருவர் கைதுசெய்யமுடியும். அத்துடன் கைதுசெய்யும் நபரை 14 நாட்களுக்குள் நீதிமன்றில் முற்படுத்த வேண்டிய தேவை இல்லை. ஒரு வருடத்துக்கு தடுத்து வைத்து விசாரணை செய்யும் அதிகாரங்களும் உள்ளன.

அதுமட்டுமன்றி இந்தச் சட்டத்தின் ஊடாகப் பெண்ணொருவரை கைது செய்யவேண்டுமானால் பெண் உத்தியோகத்தர்தான் தேவை என்றில்லை. யாரும் கைது செய்யலாம் என்ற ஏற்பாடே உள்ளது.

இந்தப் புதிய வரைவில் மனித உரிமைக்குப் பாதகமான பல விடயங்கள் உள்ளதை உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையும் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளன. எனினும், இதனை அரசு கண்டுகொள்வதாக இல்லை.

தற்போதைய சூழ்நிலையில் இந்தச் சட்ட வரைவை நிறைவேற்ற அரசுக்குப் பெரும்பான்மை இல்லை. நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கினாலேயே இதனை நிறைவேற்ற முடியும்.

எனவே, இவ்வாறான காட்டுமிராண்டித்தமான சட்ட வரைவுக்கு ஆதரவை வழங்காது எமது கட்சியுடன் இணைந்து இதனை எதிர்க்கவேண்டும்.

அத்துடன் வரவு – செலவுத் திட்டம் வெறும் ஆசை வார்த்தைகளைப் பிரயோகித்து மக்களை ஏமாற்றும் திட்டமாகவே உள்ளது.

வடக்கு – கிழக்கில் நிலையான அபிவிருத்தித் திட்டங்கள் எவையும் பெயர் குறிப்பிடப்பட்டுக் கூறப்படவில்லை. எனவே வடக்கு – கிழக்கு மக்களுக்குப் பிரயோசனம் அற்ற வரவு – செலவுத் திட்டத்தையும் எம்முடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்க வேண்டும்.

நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசமைப்பு என்ற விடயத்தைக் கையில் வைத்துக் கொண்டு கூட்டமைப்பினரைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றார். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பல முக்கியமான விடயங்களைக் கூறுகின்றார். ஆனால், அதனை ரணில் மிகவும் தந்திரமாக ஏமாற்றி வருகின்றார்.

எனவே வடக்கு – கிழக்கு மக்களுடன் நாமும் புதிய பயணத்தில் பயணிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்முடன் கைகோர்க்க முன்வரவேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்” – என்றார்.

No comments