உலகத்தையே போராடவைத்த ஒற்றைச் சிறுமி.! நோபல் பரிசுக்கும் பரிந்துரை!
வெறும் 16 வயதான அந்த சிறுமி, உலக அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா?
“அனைத்தையும்விட அதிகமாக உங்கள் குழந்தைகளை நீங்கள் நேசிப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால் அவர்களின் கண்களுக்கு முன்பே அவர்களின் எதிர்காலத்தை திருடிக்கொண்டிருக்கிறீர்கள்” என்றாள் அந்த சிறுமி.
ஆகஸ்ட், 2018
ஸ்வீடிஷ் பாராளுமன்றத்தின் வெளியே ஒரு சிறுமி ஒரு சின்னப் பதாகையுடன் தனியாளாக வந்தமர்ந்தார். ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்றும் பள்ளி வகுப்பைப் புறக்கணித்துவிட்டு வந்து இப்படி அமர்ந்து போராடுவார். க்ரேடா துன்பெர்க் என்ற அந்த சிறுமி போராடுவது பருவநிலை மாற்றத்துக்குப் பாராமுகம் காட்டும் அரசாங்கங்களுக்கு எதிராக. அரசியல்வாதிகளிடம் பதாகைகளைக் காட்டி ஏதாவது செய்யுமாறு கெஞ்சுகிறாள்.
செப்டம்பர், 2018
அவளது நண்பர்களும் இணைந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர்கள் வகுப்புகளைப் புறக்கணிக்கிறார்கள். அவர்கள் அந்நாளை “வருங்காலத்திற்கான வெள்ளி”(#FRIDAYSFORFUTURE) என்று அழைக்கிறார்கள்.
டிசம்பர் 2018
இந்தப் போராட்டம் உலகம் முழுவதும் 270 நகரங்களுக்குப் பரவியது.
பிப்ரவரி 2019
உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த இயக்கத்தில் கலந்துகொள்கின்றனர். போராடிக்கொண்டிருந்த குழந்தைகளைப் பொய்யர்கள் என்று சொன்னதற்காக பெல்ஜியமின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.
மார்ச் 2019
உலகம் திரும்பிப் பார்த்திருக்கிறது. உலகமே போராடிக்கொண்டிருக்கிறது.
அந்தச் சிறுமி ஆற்றிய உரையின் ஒவ்வொரு வார்த்தையும், உலக மக்கள் ஒவ்வொருவரின் காதிலும் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும்.
“நீங்கள் பிரபலமாக இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்களா? ஆனால் எனக்குப் பிரபலமாவதைப் பற்றிய கவலை இல்லை. என் கவலை எல்லாம் பருவநிலை நீதியைப் பற்றியதும் உயிர் உலகம் பற்றியதும் ஆகும். இதைச் சொல்லும் அளவிற்குக்கூட உங்களுக்கு திராணி இல்லை. அந்தக் கஷ்டத்தையும் நீங்கள் எங்களைப் போன்ற குழந்தைகளிடமே விட்டுவிட்டீர்கள்.
ஒரு சிறிய குழு தொடர்ந்து கணக்கிலடங்காத பணம் ஈட்டுவதற்காக நமது ஒட்டுமொத்த நாகரிகமும் தியாகம் செய்யப்படுகிறது. என் நாட்டில் இருக்கும் பணக்காரர்களைப் போன்றவர்கள் சொகுசாக வாழ்வதற்காக நமது உயிர்கோளாம் தியாகம் செய்யப்படுகிறது. இந்தச் சிறிய குழுவின் சொகுசிற்காக ஒட்டுமொத்த சமூகமும் துன்பப்படுகிறது. இந்நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்காதவரை, எதிர்காலத்திற்கான நம்பிக்கை நம்மிடம் இல்லை.
2078ஆம் ஆண்டு நான் என் 75ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவேன். எனக்குக் குழந்தைகள் இருந்தால் அவர்கள் என்னுடன் அந்நாளைக் கொண்டாடுவார்கள். அவர்கள் என்னிடம் உங்களைப் பற்றிக் கேட்பார்கள். எதிர்காலத்தைக் காப்பதற்கான நேரமிருந்தும் நீங்கள் ஏன் எதுவுமே செய்யவில்லை என்று கேட்பார்கள். நீங்கள் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எது நம்மைப் படுகுழியில் தள்ளியதோ அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். உடனடியாக இந்த ‘வளர்ச்சி’ வேலைகளை நிறுத்துவதே அறிவார்ந்த செயல் என்று தெரிந்தும் நீங்கள் அதைச் செய்யவில்லை. இந்தக் கட்டமைப்பிற்குள் தீர்வைக் காண்பது இயலாத காரியமென்றால், நாம் இந்தக் கட்டமைப்பையே மாற்ற வேண்டும். நாங்கள் இங்கே உலகத் தலைவர்களிடம் மன்றாட வரவில்லை. ஏனென்றால் நீங்கள் எங்களைப் புறக்கணித்தீர்கள்.. இனியும் புறக்கணிப்பீர்கள். நீங்கள் மன்னிப்புகளுக்கு அப்பால் சென்றுவிட்டீர்கள். நாங்கள் காலத்தின் எல்லையில் நிற்கிறோம்.
ஆனால் நம்மால்(குழந்தைகளால்) இதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். உண்மையாக மாற வேண்டும் என்று விரும்பினால் நாம் எவ்வளவு செய்வோம் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆனால் அதைச் செய்து முடிப்பதற்கு நாம் தெளிவாக பேசவேண்டும். அது எவ்வளவு சங்கடமானதாக இருந்தாலும் சரி. சீரழிவு நடக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளாமல் நம்மால் அதைச் சரிசெய்ய முடியாது. நாங்கள் இங்கே வந்திருப்பது, மாற்றம் வந்துவிட்டது என்பதை உணர்த்துவதற்காக. உண்மையான சக்தி மக்களுடையது, மக்களுக்கானது.”
நன்றி க்ரேட்டா...!
குழந்தைகள் தங்கள் எதிர்காலத்திற்காகக் குரல் கொடுங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இனியும் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் அவர்களை ஏமாற்ற முடியாது!
‘வளர்ச்சியும் வேண்டாம், முன்னேற்றமும் வேண்டாம். வாழ்வதற்கு இந்த பூமியை விட்டுவைத்தால்போதும்’ என்கின்றனர் வருங்காலத் தலைமுறையினர்.
அவர் தொடங்கியிருக்கிறார். நாம் தொடர்வோம்.
–நரேஷ்-
Post a Comment