சுரேன் இராகவன்: பாலுக்கும் காவல்: பூனைக்கும் தோழன்!


ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்க வட மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டுமென கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் அல்லது பொது அமைப்புகள், எதிர்வரும் புதன்கிழமை (13)ஆம் திகதி யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெறவுள்ள ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பின்போது எழுத்து மூலமாக நேரடியாக கையளிக்கமுடியுமெனவும் பொதுமக்களின் நலன் கருதி குறித்த கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கென தனியான பிரிவு அன்று அமைக்கப்படவுள்ளதாகவும் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கள் இழுத்து மூடும் நடவடிக்கைகளில் குதித்துள்ளது.

பழைய காயங்களைக் கிளற விரும்பவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணைகளை நடத்தக் கோரி, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் முறைப்படி கோரவுள்ளதாக  இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போர் முடிந்து பத்தாண்டுகளாகி விட்டன.  நாங்கள் நாட்டில் அமைதியை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று கொழும்பில் நேற்று தமது வதிவிடத்தில்  செய்தியாளர்களிடம் அவர் கூறியிருந்தார். 

“கடந்த காலத்தை தோண்டியெடுத்து பழைய காயங்களை மீண்டும்  கிளற வேண்டாம்.  கடந்த காலத்தை மறந்து நாம் சமாதானத்தில் வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம் என்று நான் அவர்களிடம் கூற விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2015இல் அதிகாரத்துக்கு வந்ததும், போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவதை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

2015இல், நம்பகமான விசாரணைகளை நடத்த 18 மாத கால அவகாசத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை அளித்திருந்தது.

எனினும், எந்த விளைவுகளும் இல்லாத நிலையில், இரண்டு ஆண்டு கால அவகாசம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், தமது சார்பில், கோரிக்கைகளை முன்வைப்பதற்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கட்சியின் மூன்று மூத்த உறுப்பினர்களை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளதாக,ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர்கள், (ஐ.நா) சாதகமான பதிலைத் தருவார்கள் என்றும் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நாவுக்கு முன்னர் வாக்குறுதிகளை அளித்திருந்த போதும், அதிபர் சிறிசேன  எந்த விசாரணைகளையும் ஆரம்பிக்கவில்லை.

இந்நிலையில் மைத்திரி ஜெனீவா அனுப்பவுள்ள குழுவில் சுரேன் இராகவனும் உள்ளடங்கியுள்ளார்.

No comments