புத்தருடன் பிள்ளையார் ஜக்கியம்: வன்னியிலோ தனித்து வருகின்றார்!


மட்டக்களப்பு பௌத்த விகாரையில் இந்து ஆலயமென ஒருபுறம் கடை திறக்க மறுபுறம் வன்னியில் புதிது புதிதாக புத்தர் மண்ணிலிருந்து புறப்பட தொடங்கியுள்ளார்.

மட்டக்களப்பு ஜெயந்தீபுரம் பௌத்த மத்திய நிலையத்தில் முருகன் பிள்ளையாருக்கான இந்து ஆலயத்தை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மட்டக்களப்பு ஜெயந்திபுர விகாரையின் விகாராதிபதி பட்டபொல குணநந்த ஹிமியின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இன நல்லிணக்கத்தினை எடுத்தக்காட்டும் வகையில் இந்து ஆலயம் ஒன்று அமைத்துத் தருமாறு விகாரைத்தரப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய மட்டக்களப்பின் பிரபல வர்த்தகரான ஆஞ்சநேயர்- சண்முகராஜாவின் நிதியளிப்பில் இந்த ஆலயம் அமைக்கப்படுகிறது.

மட்டக்களப்பு ஆஞ்சநேயர் ஆலய பிரதம குரு சிவசிறி ஜெகதீஸ்வர சர்மா தலைமையில் பூஜை வழிபாடுகள் நடைபெற்று ஆலயத்துக்கான அடிக்கல் நடைபெற்றது.

இதனிடையே வவுனியா புளியங்குளத்தில் முச்சக்கரவண்டியில் புதையல்களுடன் சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊஞ்சல்கட்டு பகுதியில் புதையல்களுடன் முச்சக்கரவண்டியில் சென்ற நால்வரை புளியங்குளம் பொலிஸார் நேற்று (22.03.2019) மாலை 4.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.
குறித்த நான்கு நபர்கள் ஊஞ்சல்கட்டு காட்டுப்பகுதியில் பேக்கோ மூலம் புதையல் தோண்டியுள்ளனர். இதன் போது பழைய காலத்து புத்தர் சிலை , கல்வெட்டு , கலசம் , விளக்கு போன்ற பல பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றிய பொருட்களை முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்ல முற்பட்ட சமயத்தில் புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் குறித்த நான்கு நபர்களை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த வாகனம் மற்றும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய 35,35,40,42 வயதுடைய தலவாக்கiலை , திருகோணமலை , மட்டக்களப்பு , நெடுங்கேணி பகுதிகளினை சேர்ந்த நான்கு  தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களிடமிருந்து கைப்பற்ற பொருட்கள் மற்றும் பேக்கோ, முச்சக்கரவண்டி போன்றவற்றை வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments