6 இலட்சம் கையெழுத்து! ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைக்குமா பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான காலக்கெடு வரும் 29 ஆம் திகதி முடிவடைகிறது. 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்த வரைவு இரு முறை பிரித்தானியப் பாராளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்  பெரும்பாண்மை நாடாளுமன்ற உறுப்பினர்களால் எதிர்த்து வாக்களித்ததால் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பிரெக்சிட் நடவடிக்கையை தாமதப்படுத்தும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 

ஐரோப்பிய ஒன்றியமோ பிரெக்சிட் நடவடிக்கையில் புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கைவிரித்துவிட்டது.

இதேநேரம் நாடாளுமன்றத்தில் ‘பிரெக்சிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜான் பெர்கோவ் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

பிரித்தானிய நாட்டுச் சட்டத்தின்படி ஒரு விவகாரம் தொடர்பாக குறைந்தபட்சம் ஒரு லட்சம் மக்கள் கையொப்பமிட்டால் அதை நாடாளுமன்றம் பரிசீலனை செய்யலாம் என்ற நிலை உள்ளது.

இதைப்பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்கரேட் அன்னி நியூசம் ஜியார்ஜியாடோ என்பவர் பிரித்தானியா அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ 'பெட்டிஷன்ஸ்’ இணையதளம் மூலமாக கையெழுத்து வேட்டை நடத்தினார்.

'ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது மக்களின் முடிவு என்று பிரிட்டன் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதை தடுத்து நிறுத்த ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதை பெருவாரியான மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை இந்த அரசுக்கு நாம் நிரூபித்தாக வேண்டும் என்றார்.

அரசியலமைப்பு சட்டத்தின் 50-வது பிரிவை பயன்படுத்தி ‘பிரெக்சிட்’ வாக்கெடுப்பை தவிடுப்பொடியாக்கும் வகையில் இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய மார்கரேட் அன்னி நியூசம் ஜியார்ஜியாடோ குறிப்பிட்டிருந்தார். 

 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்  ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வாக்களித்துள்ள நிலையில் பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக விரைவில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிகளவு மக்கள் ஒரேநேரத்தில் வாக்களிக்க முற்பட்டதால் நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ 'பெட்டிஷன்ஸ்’ இணையதளம் முடங்கிப்போயுள்ளது.

No comments