கோத்தாபடை முகாம் காணியினை விடுவிக்க கோருகின்றது தமிழரசு!


முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களின் 617ஏக்கர் காணியில் அமைந்துள்ள, கோத்தபாய கடற்படை முகாம் அகற்றப்பட்டு,குறித்த காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் தமிழரசு பிரமுகருமான துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில், 617 ஏக்கர் காணியில் கோத்தபாய கடற்படை முகாம் என்ற ஒரு முகாமை அமைத்து, இந்த வட்டுவாகல் மக்களுடைய நிலத்தை அபகரித்த வண்ணம் இன்றுவரை விடுவிக்காமல் அராஜகம் நடந்துகொண்டிருக்கின்றது.நிச்சயமாக அறைகூவல் விடுக்கின்றேன், எங்களுடைய மக்களுடைய அந்தக் காணி 617 ஏக்கரும் விடுவிக்கப்பட்டு கடற்படைத் தளம் இந்த இடத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.

இந்த மக்களுடைய காணி இந்த மக்களுக்குக் கிடைக்கவேண்டும். இதற்கான வழிகளை குறித்த அரசாங்கத்திலுள்ளவர்கள் கரிசனையோடு செயற்பட்டு, இந்த இடத்திலிருந்து குறித்த கடற்படை முகாமினை அகற்றி நிச்சயமாக இந்த மக்களுடைய சொந்தக் காணி, முள்ளிவாய்க்கால்  கிழக்கு,  வட்டுவாகல் பகுதியிலுள்ள மக்களுடைய காணிகள் என்பதுடன், இராணுவத்தினர் அங்கு குடியிருப்பதால் நந்திக்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுடைய பொருண்மியமும் வெகுவாக பாதிக்கப்படுகின்றது.

எனவே அந்தக் காணிகளை விடுவிப்பதற்குரிய வழியை சம்பந்தப்பட்டவர்கள் செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments