சட்டங்கள் மாறினாலும் அரசியல் கைதிகளிற்கு பலனில்லை?


பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாகப்பட்டாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் அச்சட்டமானது பிரஜைகளை ஒருவித அச்சமானதும், பதற்றமானதுமான சூழலுக்குள் வைத்திருப்பதற்கே வித்திடுகின்றது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையானது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு காத்திரமான நடவடிக்கை எனவும், இந்த அவசரகால ஒழுங்கு விதிகள் நீக்கப்பட்டுள்ளதால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1200 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அப்போதைய நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார். நீதி அமைச்சராலும், சட்டமா அதிபரினாலும் முரண்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இறுதியில் எதுவுமே நடைபெறாமல் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும், புனர்வாழ்வின் கீழும் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டனர். தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதியால் அவசரகால ஒழுங்குவிதிகள் நீக்கப்பட்டு விட்டன என அரசினால் அறிவிக்கப்பட்ட போதிலும் அவசரகால ஒழுங்கு விதிகளில் முக்கியமான சில விதிகள் பயங்கரவாத தடைச் சட்டத்திற்குள் உட்புகுத்தப்பட்டு நிரந்தரமாக சட்டமாக்கப்பட்டு நடைமுறையில் இருப்பது தான் நிதர்சனமான உண்மை. அவசரகால நிலை தொடர்ச்சியற்றதாகி ஏறத்தாழ ஒரு வாரத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான குறிப்பிட்ட சில ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்தியிருப்பதாக அரசாங்கம் கூறியது. அனால் அத்தகைய ஒழுங்கு விதிகள் எவையும் காணப்படவில்லை.

மாறாக அவை, அவசரகால ஒழுங்கு விதிகள் நீக்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி அறிவித்த நான்காவது நாளான 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதியிடப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் 27ஆவது பிரிவில் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்தல், அவசரகால நிலை ஏற்பாட்டு நடவடிக்கைளுக்காக விண்ணப்பங்கள் நீடிப்பு, அவசரகால நிலை தொடர்ச்சியற்றதாகிய போதிலும் பல்வேறு அவசரகால ஒழுங்கு விதிகளை தொடர்தல், சந்தேகநபர்களை தடுத்து வைத்தல், முன்னரே அவசரகால ஒழுங்கு விதியின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களை தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகள், சரணடைந்த நபர்களை புனர்வாழ்வின் கீழ் வைத்திருத்தல் போன்றனவை உள்ளக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட ஒழுங்கு விதிகள் முழுவதும் ஒரு புதிய சட்டவாகத்தின் விளைவைக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றத்தில் தத்துவத்தை சட்ட முறையின்றி தன்னிச்சையாக எடுத்த சில ஏற்பாடுகளையும் அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அதன் கீழ் கைது செய்யப்பட்ட எவரும் நீக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments