தேசிய அரசாங்க யோசனை - இன்று வாக்கெடுப்பு

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

ஆளும்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று கட்டாயம் சபைக்கு வர வேண்டும் என்றும், தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் அரசாங்க தலைமை கொரடா கயந்த கருணாதிலக எழுத்து மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நாடாளுமன்ற செயற்பாட்டுக் குழுவின் கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், இந்தப் பிரேரணையை இன்று விவாத்துக்கு எடுப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜேவிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈபிடிபி ஆகிய கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

எனினும், அரசாங்க செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று அரசதரப்பு பிரதிநிதிகள் வாதிட்டனர்.

இந்த நிலையில், இன்று முழுநாளும் விவாதம் நடத்தப்பட்ட பின்னர், மாலையில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 30இல் இருந்து 48 அக அதிகரிப்பதற்கும்,  பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை 40 இல் இருந்து 45 ஆக அதிகரிப்பதற்கும் இந்த பிரேரணையின் மூலம், நாடாளுமன்றத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

ஐதேகவும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க அனுமதி கோரும் பிரேரணைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜேவிபி ஆகிய கட்சிகள் வாக்களிக்கவுள்ளன.

எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவு அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், தேசிய அரசை அமைக்கும் பிரேரணைக்கு ஆதரவு அளிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர எச்சரித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள போதும், வாக்கெடுப்பில் அதன் நிலைப்பாடு என்ன என்பது பற்றி இன்னமும் தெரியவரவில்லை.

பெரும்பாலும் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் வாக்களிக்காமல் விலகியிருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிப்பதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்திருக்கிறார் என்று அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments