தீர்வு கிடைக்காவிடில் தற்கொலை செய்வேன் - குடும்பஸ்தர் கண்ணீர்

காணிப் பிரச்சினை தொடர்பில் தாக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது விட்டால் தான் தற்கொலை செய்வதைவிட வேறு வழியில்லை என்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பாக்கியதுரை பரமேஸ்வரன் (வயது 46) கவலையுடன் தெரிவித்துள்ளார்.

இன்று  (28) யாழ்.ஊடக அமையத்துக்கு வருகைதந்த பரமேஸ்வரன் ஊடகவியலாளர்களுக்கு முன் தனது பிரச்சினையை சொல்லி அழுதுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது

கடந்த 04.05.2018 அன்று புதுக்குடியிருப்பில் இருக்கும் தனது காணியை இரு வேலையாட்களைக் கொண்டு அடைக்க முயன்றுள்ளார். அவ்வேளை பக்கத்துக்கு காணிக்காரரின் சொந்தக்காரர்களான பெண்ணும் அவரது கணவனும் காணிக்குள் வந்து கொலை செய்யும் முயற்சியில் வேலையாட்களை கத்தியாலும் மண்வெட்டிப்பிடியாலும் தாக்கியுள்ளனர். இந்தப் பிரச்சினை தொடர்பில் நீதிமன்றம் சென்றுள்ளனர். நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ளதாக அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான பெனடிக் சிறில் (55) வேதாரணியம் நவதீஷ்வரன் (40) ஆகியோர் தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் வைத்தியசாலையிலும் மனித உரிமை ஆணையகத்திலும் சரியாக அணுகவில்லை என்றும் ஆவணங்களிலும் பிழை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

அதாவது காயத்துக்கு மருந்து கட்டிய வைத்தியசாலை வயித்துக்குத்து காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பட்டை பதிவு செய்துள்ளது. மேலும் தாக்கிய பெண்மணி தன்னைத் தாக்கியதாக முறைப்பாடு பதிவு செய்யும் போது காணி உரிமையாளர் தன்னை தாக்கியதாகவும் இன்னொன்றில் அவரின் மகன் தன்னைத் தாக்கியதாகவும் இரு வேறு முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் தனக்கு நீதிகிடைக்கவில்லை என்றால் தான் தற்கொலை செய்வதைவிட வேறுவழியில்லை என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.

No comments