அதிகளவு வட்டிக்கு தடை ஏற்றபடுத்த நுண் கடன் சட்டம்

அதிகளவு வட்டிக்கு தடை ஏற்றபடுத்த நுண் கடன் சட்டம் தயார் என அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.நுண்கடன் திட்டத்துக்குப் பதிலாக என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா அரச சலுகை வட்டி கடன் திட்டத்தில் இணையுமாறு அமைச்சர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (14) நடைபெற்ற வரட்சியால் பாதிப்படைந்த மாவட்டங்களில் 45000 பெண்கள் பெற்றுக்கொண்ட நுண்கடனையும் அதற்கான வட்டியையும் இரத்து செய்யும் சான்றிதழ் பத்திரங்களை வழங்கும் நிகழ்வின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் பங்களிப்புடனும் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 300 பெண்களின் நுண்கடன் இரத்து உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது.

அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நுண்கடன் திட்டம் என்பது ஏழ்மையை ஒழிப்பதற்கான சிறந்த திட்டம். ஆனால் அது ஒழுங்கமைப்புச் செய்யப்பட வேண்டும். அதற்காக சட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும். எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா அரசின் சலுகை கடன் வட்டி திட்டம் சரியான பதிலாகும். சிறு உற்பத்தியாளர்கள், விவசாயிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்வாங்கும் வகையில் இக்கடன் வழங்கப்படும்.

நாம் உங்களுக்கு இந்த கடனை பெற்றுக்கொடுக்க விசேட வசதிகளை வழங்கும்படி குறிப்பிட்ட வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். ஆனால் எந்தவொரு வங்கியாவது அவ்வாறு சலுகையை வழங்காவிட்டால் 1925 என்னும் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு எமக்கு அறியத் தாருங்கள் எனவும் தெரிவித்தார்.

No comments