தள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்!


தள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார்.

இலங்கை சுதந்திரதின நிகழ்வுகள் அண்மையில் காலி முகத்திடலில் நடைபெற்றபோது, இரா.சம்பந்தன் அதில் கலந்து கொண்டிருந்தார்.

வடக்கு,கிழக்கில் கரிநாளாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கொண்டிருந்தபோது, இரா.சம்பந்தன் மட்டும் வழக்கம் போல இலங்கை சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

இதேபோல, அந்த நிகழ்வில் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது அனைவரும் எழுந்து நின்ற சமயத்தில், இரா.சம்பந்தன் மட்டும் எழுந்து நிற்கவில்லை.இதற்கும் தென்னிலங்கை சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு எழுந்தது.

இரா.சம்பந்தன் வேண்டுமென்றே, இலங்கை கொடியை, தேசிய கீதத்தை அவமரியாதை செய்ய வேண்டுமென செயற்படுபவர் அல்ல. அவரது உடல்நிலை காரணமாகவே அப்படி உட்கார்ந்திருந்திருக்கலாமென ஒரு கருத்து நிலவி வந்தது.அந்த கருத்து சரியாதென்று இப்போது தெரிய வந்துள்ளது.

அன்றைய நிகழ்வில் ஏன் எழுந்து நிற்கவில்லையென இரா.சம்பந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலரிடம் காரணம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடந்தபோது, சம்பந்தன் இந்த விளக்கத்தை தெரிவித்தார்.


தான் உட்கார்ந்திருந்த இடத்தின் முன்பாக, தனக்கு எழுந்து நிற்க வசதி குறைவான அமைப்பு இருந்ததாகவும்- படிபோன்ற அமைப்பிருந்ததாக குறிப்பிட்டார்- எழுந்து நிற்க முயற்சித்தால், நிச்சயம் விழுவேன் என தெரிந்ததாகவும் குறிப்பிட்டார்.

எழுந்த நிற்க முயற்சித்து விழுந்தால் அது அரசியல்ரீதியாக மோசமான அபிப்பிராயத்தை உருவாக்கி விடும் என்பதால், உட்கார்ந்திருக்க முடிவெடுத்ததாகவும், உட்கார்ந்திருந்தால் தென்னிலங்கை ஊடகங்கள் அதை கடுமையாக விமர்சிக்கும் என்பதை அறிந்திருந்ததாகவும், ஆனால் விழுந்து மோசமான அப்பிராயத்தை ஏற்படுத்துவதை விட, ஊடகங்களின் விமர்சனத்தை எதிர்கொள்ளலாமென முடிவெடுத்து உட்கார்ந்திருந்ததாக குறிப்பிட்டார்.

No comments