ஈழ அகதிகள் 34 பேர் நாடுதிரும்பவுள்ளனர்

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகத்தின் அனுசரணையுடன் தமிழகத்தின் மதுரை, திருச்சி, சென்னையில் இருந்து இம்மாதம் 14ஆம் திகதி 16 குடும்பங்களைச் 34 பேர் இலங்கை திரும்பவுள்ளனர்.

நாடு திரும்பும் இந்த முதல் தொகுதி குடும்பங்களில் 15 ஆண்களும் 19 பெண்களும் அடங்குகின்றனர் என்று புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கை அகதிகளை திருப்பியழைத்து வருவதற்கான செயன்முறைகளில் கடுமையான விதிமுறைகளை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகம் பின்பற்றுகிறது.

30 வருடகால உள்நாட்டுப்போரின் போது இடம்பெயர்ந்து இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் பற்றிய அவசியமான சகல ஆவணங்களும் பட்டியல்களும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரக அதிகாரிகளிடம் இருக்கின்றன.

நாடு திரும்பும் இலங்கை அகதிகள் மத்தியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் எவரும் இல்லை.

தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகத்தின் உதவியுடன் உகந்த சட்ட ரீதியான வழிமுறைகளின் ஊடாக மாத்திரமே இலங்கை திரும்பமுடியும்.

போரின் விளைவாக இடம்பெயரும்வரை அவர்கள் வாழ்ந்த வவுனியா, மன்னார், மாத்தளை, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலேயே அகதிகள் மீள்குடியமர்த்தப்படுவர்.

விமான நிலையத்தில் வந்திறங்கும்போது அகதிகளுக்கு 5 ஆயிரம் ரூபா ஆரம்பக் கொடுப்பனவு வழங்கப்படும்.

அகதிகள் தங்கள் சொந்தக் கிராமங்களுக்கு திரும்பிய பிறகு 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும். அத்துடன் தங்களது காணிகளைத் துப்புரவு செய்வதற்கான அடிப்படை உபகரணங்களுக்காக 3 ஆயிரம் ரூபாவும் வேறு தேவைகளுக்காக 5 ஆயிரம் ரூபாவும் ஒவ்வொரு அகதிக்கும் வழங்கப்படும்.

அவர்கள் வீடுகளைப் பெறுவதற்கும் உரித்துடையவர்கள். வீடுகள் கையளிக்கப்படும்போது இந்த அகதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 11,020 பேர் உள்நாட்டுப் போர் 2009 மேயில் முடிவடைந்த பின்னரான காலகட்டத்தில் இதுவரை இலங்கை திரும்பியிருக்கிறார்கள்.

மேலும் 3,815 அகதிகள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகத்தின் அனுசரணையுடன் நாடு திரும்ப விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குடும்பமொன்றுக்கு 100,000 ரூபா தொடக்கம் 150,000 ரூபா வரை வழங்கப்படுகின்ற வாழ்வாதார ஆதரவுத் திட்டத்துக்கு விண்ணப்பம் செய்வதற்கும் அகதிகள் உரித்துடையவர்கள்.

ஆனால், நாடுதிரும்புகின்ற சகல அகதிகளுக்கும் வாழ்வாதார ஆதரவு வழங்கப்படமாட்டாது. விண்ணப்பிக்கும்போது தேவைகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

இலங்கை அகதிகள் சுமார் ஒரு இலட்சம் பேரில் 65 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களே தமிழகத்தில் நலன்புரி நிலையங்களில் இருக்கிறார்கள்.

எஞ்சியவர்கள் தங்களது நண்பர்கள், உறவினர்களுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியிருக்கிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை திரும்புவதில் நாட்டம் காட்டவில்லை. இந்திய வாழ்க்கைமுறைக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டார்கள்” – என்றார்.

No comments