புதிய சட்டம் ஜனநாயக குரல்களை முடக்கும்!


தற்போது தயாராகிவரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுலாக்குவதன் ஊடாக, ஜனநாயகக் குரல்களை நசுக்கி, ஒட்டுமொத்தமாக எம்மீது அடிமைச் சாசனத்தை எழுதத் தயாராகும் பெரும்பான்மையினத்தின் நாசுக்கான நகர்வை உடன் நிறுத்துவதற்கு, அனைத்துத் தரப்புகளும், பேதமின்றி ஒன்றிணைய வேண்டுமென, சிவசக்தி ஆனந்தன் எம்.பி, பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார். 
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்காக, நாடாளுமன்றத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனால், நேற்று (06) விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள அவர், இந்த நாட்டுத் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற போதும், சத்தமின்றி யுத்தமொன்றை மேற்கொள்வதற்காக, இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் வலிந்து அமுலாக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.  

இதற்கு எதிராக, தொடர்ச்சியாக எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், அந்தச் சட்டத்தை மாற்றி, சர்வதேச நியமனங்களுக்கு உட்பட்டு, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது என்றும் சர்வதேச ரீதியில் பயங்கரவாதம் தலைதூக்கி வருவதால், அத்தகைய சட்டமொன்று நாட்டுக்கு அவசியமெனக் காரணம் கற்பித்ததென்றும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இத்தகைய பின்னணியில், 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதியன்று, மேற்படி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்து, விரைந்து அமுலாக்குவதற்கு, திரைமறைவில் அமைதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிவதாக, சிவசக்தி ஆனந்தன் எம்.பி குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜாவின் கருத்துப்படி, எந்தவொரு பிரஜையையும், சந்தேகத்தின் பேரில் பயங்கரவாதி என்று கருதமுடிவதோடு, பிடியாணையின்றி எவரையும் கைதுசெய்வதற்கும்; வெறும் சந்தேகத்தின் பேரில், பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படையில் அமைவிடங்களுக்குள் பிரவேசிப்பதற்கும், தேடுதல் செய்வதற்கும், இந்தப் புதிய சட்டம் அனுமதி வழங்குவதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதுமட்டுமன்றி, இந்தப் புதிய சட்டத்தினூடாக, அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதை வலுப்பதற்கே வழி சமைக்கப்பட்டுள்ளது என்றும் விசாரணையில் இருக்கும் போது சித்திரவதை அனுபவித்தால், மீண்டும் விசாரணையாளர்கள் இடத்திலேயே முறையிட வேண்டிய நிலைமைகள் இருப்பதானது, திருடன் கையில் சாவியைக் கையளித்ததைப்போன்று தான் என்றும் ஆகவே, சாட்சிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனைவிட, மரணதண்டனை, குற்ற ஒப்பதல் வாக்குமூலம், தடுத்து வைத்து விசாரணை செய்தல் ஆகியனவும், மிகவும் ஆபத்தானவையாகவே உள்ளன. மிக முக்கியமாக ஒரு பெண்ணை, ஆண் பொலிஸ் அல்லது பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் கைது செய்வதற்குக் கூட, இந்தச் சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதெனவும், ஆனந்தன் எம்.பி மேலும் குறிப்பிட்டுள்ளார். 

No comments