விடுதலைப்புலிகளுடன் பிளவு ஏற்படுத்த சதி:ஈபிஆர்எல்எவ்!


சில அரசியல் சக்திகள் எங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஒரு இடைவெளியை உருவாக்கும் பொருட்டும், இதனூடாக ஒரு குறுகிய அரசியல் இலாபத்தை எட்டும்பொருட்டும் ஈபிஆர்எல்எவ் விடுதலைப் புலிகளின்மீது திட்டமிட்ட குற்றச்சாட்டைச் சுமத்துகிறது என்ற தோரணையில் சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றார்களென கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஈபிஆர்எல்எவ் கட்சியின் துணைச் செயலாளரான அவர் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஏறத்தாழ நாற்பதாண்டுகால வரலாற்றைக் கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது மகாநாடுகளையும், மரணித்துப்போன மக்களையும் போராளிகளையும் கௌரவிக்கும் முகமாக வருடாந்தம் தியாகிகள் தினத்தையும் நடாத்தி வருகின்றது. தமிழ் மக்களின் தாயகம் வடக்கு-கிழக்கு என்ற அடிப்படையில், வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண அரசு ஒன்றை நிறுவி, திருகோணமலையை தலைநகராகக் கொண்டு அந்த மாகாண அரசிற்கான நிர்வாக கட்டமைப்பு ஒன்று அங்கு நிறுவப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், மீண்டும் வடக்கு-கிழக்கு தனித்தனியாக்கப்பட்டு இப்பொழுது வடக்கும் கிழக்கும் இரண்டு மாகாணசபைகளாக இயங்கி வருகின்றன. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி திம்பு பேச்சுவார்த்தையிலிருந்து இன்றுவரை, தமிழ் இயக்கங்கள் மற்றும் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்து வந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்னர், வவுனியாவில் நடைபெற்ற தியாகிகள் தினத்தின்போது எமது கட்சி கடந்துவந்த பாதைகள் தொடர்பாக ஒரு வரலாற்றுக் குறிப்பேட்டை வெளியிட்டது. அது ஒரு முழுமை பெற்ற வரலாற்றுக் குறிப்பேடு அல்ல என்பதையும் அதன் கடைசிப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோற்றம், அதன் மக்கள் அணிதிரட்டும் செயற்பாடு, அரசியல் இராணுவ நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாக சிறு குறிப்புக்களைக் கொண்டதாக அக்கையேடு அமைந்துள்ளது. எமது கட்சி கடந்து வந்த கரடு முரடான பாதைகளில் கந்தன் கருணை சம்பவமும் ஒன்று. அது ஒரு சம்பவமாகக் குறிப்பிடப்பட்டதே அன்றி, யாரையும் கொச்சைப்படுத்துவதற்காகவோ, குற்றம் சுமத்துவதற்காகவோ, அல்லது அவர்களின் செயற்பாடுகளைக் குறைத்து மதிப்பிடுவதற்காகவோ பதிவு செய்யப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

இந்தக் குறிப்பேடு முதன்முதலில் 21.06.2015 அன்று நடைபெற்ற ஈழ மக்கள் புரடசிகர விடுதலை முன்னணியின் 25ஆவது தியாகிகள் தினத்தில் வெளியிடப்பட்டது. அத்தியாகிகள் தினத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். அன்று அந்த ஆவணம் தொடர்பாக எந்தவித விமர்சனங்களோ, குற்றச்சாட்டுக்களோ, கருத்துக்களோ யாராலும் முன்வைக்கப்படவில்லை. அதே குறிப்பேடுதான் கடந்த 03.02.2019 அன்று எமது கட்சியின் யாழ்-கிளிநொச்சி பிராந்திய மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

இம்மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 12,000 போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசும் அரச வங்கிகளும் அவர்களுக்கான உதவிகளைச் செய்யும் எனக் கூறப்பட்டபோதும், அவ்வாறான உதவிகளை கடந்த பத்து வருடங்களாக அவர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதில் பெருமளவானோர் மாற்றுத் திறனாளிகளாகவும் உள்ளனர். இவர்கள் தனது இனத்தின் விடுதலைக்காகப் போராடுவதற்காக நிர்ப்பந்திக்கப்பட்டதால் பலர் கல்வியையும், தொழில்வாய்ப்பையும், எதிர்காலத்தையும் இழந்துள்ளனர். இவர்களை பயங்கரவாதிகள் என்று ஒதுக்கிவிடாமல், இவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் வாழ்வாதாரத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என இம்மகாநாடு அரசைக் கோருகின்றது என்பதும் ஒன்றாகும்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எமது கட்சியின் பிராந்திய மகாநாடானது மக்கள் வெள்ளத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் சக்திகள் எங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஒரு இடைவெளியை உருவாக்கும் பொருட்டும், இதனூடாக ஒரு குறுகிய அரசியல் இலாபத்தை எட்டும்பொருட்டும் ஈபிஆர்எல்எவ் விடுதலைப் புலிகளின்மீது திட்டமிட்ட குற்றச்சாட்டைச் சுமத்துகிறது என்ற தோரணையில் சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றார்கள்.

கடந்த 3ஆம் திகதி காலையில் நடைபெற்ற எமது மகாநாட்டின் பின்னர் மாலையில் சாவகச்சேரியில் திரு.சுமந்திரன் ஒரு கூட்டத்தில் உரையாற்றியபோது நாம் வெளியிட்ட வரலாற்றுக் குறிப்பேட்டைக் குறிப்பிட்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகிறோம் என்ற பாணியில் அங்கு உரையாற்றினார். அவரது உரையை சமூக வலைதளங்களும் சில ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற ஊடகம் ஒன்று இன்னுமொரு படிமேலே போய் நீதியரசரும், வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சருமான கௌரவ சி.வி. விக்னேஸ்வரன்தான் இதை வெளியிட்டதாக உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டது. அத்தகைய எந்தவொரு நிகழ்வும் நடைபெறவில்லை.

முன்னாள் முதல்வரின் தமிழ் மக்கள் கூட்டணியும், எமது கட்சியும் ஏனைய ஒரு சில அமைப்புக்களும் இணைந்து ஒரு மாற்றுத் தலைமையை, ஒரு மாற்று அணியை உருவாக்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற ஒருசில சக்திகள் எமது வரலாற்றுக் குறிப்பேட்டில் வந்த ஒரு செய்தியை பூதாகாரப்படுத்தி, ஒரு மாற்று அணியை உருவாகவிடாமல் தடுப்பதிலும், தப்பித்தவறி அப்படி ஒரு அணி உருவாகிவிட்டால் அதில் ஈபிஆர்எல்எவ் அங்கம் வகிக்கக்கூடாது என்ற உள்நோக்கத்துடனும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருவதுடன், முதலமைச்சருக்கும் பொய்யான தகவல்களையும் அனுப்பி வருகின்றனர். ஆகவே, எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே நாம் இந்த அறிக்கையை வெளியிடுகின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நாம் நல்ல உறவுகளைப் பேணி வந்திருக்கின்றோம். எமது தியாகிகள் தினத்தில் கலந்துகொண்டு விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் உரையாற்றியிருக்கின்றார்கள். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அவர்களின் பங்கு மகத்தானது.

ஒரு தேசிய இனத்தின் விடுதலையை வென்றெடுப்பதற்காக ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள் என்ற அடிப்படையில் நாம் எந்தவொரு ஆயுதப் போராட்ட அமைப்பையும் கொச்சைப்படுத்தியவர்கள் அல்ல. தமிழ்த் தேசிய உணர்வை மழுங்கடிக்கும் வகையில் கருத்துறுவாக்கம் செய்பவர்களும், மாற்று அணி, மாற்றுத் தலைமை தேவை என்பதைப் புரிந்துகொண்டாலும், தாம் மட்டுமே அந்த அணியில் இருக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களும் இத்தகைய சேறுபூசும் நிகழ்ச்சி நிரலின் பின்னால் இருக்கிறார்கள் என்பதை எமது மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நாம் திடமாக நம்புகிறோமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments