எல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு


அநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் வான் பிரிவின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இருவர் மீதான சிறைத் தண்டனையை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமனினால், அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம், சங்கானையைச் சேர்ந்த பி.அரவிந்தன் மற்றும் வான் புலிகள் பிரிவின் முன்னாள் தலைவர் என்று கூறப்படும் ராசவல்லன் தவரூபன் ஆகிய இருவருமே ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 8 வருடங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டனர்.
அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றில் அவர்கள் இருவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டனர். அதற்கமைவாக அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.

2007ஆம் ஆண்டு ஒக்ரோபர் 22ஆம் திகதி அதிகாலை எல்லாளன் நடவடிக்கை எனப் பெயரிடப்பட்டு அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வான்வழித் தாக்குதல் மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குல் என்பன நடத்தப்பட்டன.
இதன்போது, இலங்கை பாதுகாப்பு படையின் 14 பேரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை குண்டுதாரிகள் 21 பேரும் கொல்லப்பட்டனர்.


சங்கானையைச் சேர்ந்த பி.அரவிந்தன் மற்றும் வான் புலிகள் பிரிவின் முன்னாள் தலைவர் என்று கூறப்படும் ராசவல்லன் தவரூபன் ஆகிய இருவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

 16 விமானங்களை அழித்து 400 கோடி ரூபாயை நட்டப்படுத்தியமை பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த 14 பேரைக் கொலை செய்தமை ஆகியவற்றுக்கு உதவினர் என்ற குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி அவர்கள் இருவருக்கும் எதிராக அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றில் 2016ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் சேய்யப்பட்டது.

No comments